நோர்வே வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

NORWAYநோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போக் பிரண்டோ இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இன்றுகாலை 8.30 அளவில் டுபாயில் இருந்து வந்த ஈ.கே.650 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவருடன் ஏழு பேர் கொண்ட தூதுக்குழு ஒன்று உடன் வந்துள்ளது. இலங்கைக்கும் நோர்வேயிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை புதுப்பிக்கும் நோக்கில், அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 2006ம் ஆண்டுக்கு பின்னர் நோர்வேயின் அமைச்சர் ஒருவர் இலங்கை வருகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அவர், ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் இன்றுமாலை வர்த்தக மாநாடு ஒன்றிலும் அவர் கலந்துகொள்ள ஏற்பாடாகியுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை, இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு முடிவுகட்டும் அமைதி முயற்சிகளில் நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே, அந்த முயற்சியில் தோல்வியடைந்த பின்னர் தற்போது மீண்டும் இலங்கையுடன் அரசியல் உறவுகளைப் புதுப்பிக்கவுள்ளது என்றவாறு ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களின் குறைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்க புதிய சேவை-

maithriஇலங்கையில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. “ஜனாதிபதிக்கு தெரிவிக்க” எனும் பெயரிலான இந்தச் சேவை எதிர்வரும் 8ம் திகதி காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது. இந்த சேவையூடாக பொதுமக்கள் தங்களுடைய குறைகள் தேவைகள் மற்றும் யோசனைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுவரலம். 1919 என்ற இலக்கத்தினை எந்தவொரு நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளுடாகவும் அழுத்தி இலக்கம் இரண்டை அழுத்துவதனூடாக இந்த சேவையினை பெற்றுக்கொள்ளலாம். அதேவேளை சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பஸ்தர் மரணம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை-

dffஇரத்தினபுரி எம்பிலிபிடிய பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. அண்மையில் எம்பிலிபிடிய புதிய நகர்பகுதி வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஏற்பட்ட முறுகலையடுத்து பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த நான்கு பொலிஸார் உட்பட ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சம்பவத்தின்போது மாடியிலிருந்து கீழே விழுந்தநிலையில் கடும் காயமடைந்த இளம் குடும்பஸ்தர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கு பொலிஸாரே பொறுப்பு கூறவேண்டும் என்று கூறி எம்பிலிபிடிய பகுதியில் பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. எம்பிலிப்பிட்டி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே ஏராளமான மக்கள் கூடியிருப்பதால் அதனை சூழவுள்ள நகரின் அனைத்து வீதிகளிலும் போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது. சிலர் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுமுன் ஆஜராகுமாறு கோட்டாபயவிற்கு அழைப்பு-

Gotabaya Rajapakse (2)முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அறிவிப்பு விடுக்கப்பட்ட தரப்பினருக்காக கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பு அழைப்பு விடுத்ததாக ஆணைக்குழு செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார் சாட்சியமளிப்பதற்காக மேலும் ஐவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னர் சாட்சியமளித்து வருவதாகவும் ஆணைக்குழு செயலாளர் கூறியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் இதற்கு முன்னரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வாக்குமூலம் அளித்திருந்திருந்தார்.

கடத்தல் விவகாரம், ஹிருணிக்காவின் ஆதரவாளர்களுக்கு பிணை-

hirunikaகொழும்பு, தெமட்டகொடயில் இளைஞர் ஒருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள் ஏழு பேருக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. தலா இரண்டு இலட்சம் ஷரூபாவான சரீரப் பிணைகளில் சந்தேகநபர்களை விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் இன்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், சாட்சியாளர்களால் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதாக முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளர்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிடுவது போன்று அது குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இதேவேளை, இதுவொரு கொலைக்குற்றச்சாட்டு அல்ல என்பதால், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு, பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து இலங்கை அவதானம்-

isisஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் தீவிரவாதிகள் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர், முழு அவதானம் செலுத்தி வருவதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசு எனப்படும் குறித்த தீவிரவாதக் குழுக்களால் நாட்டில் முன்னெடுக்கப்படுவதாக சந்தேகிக்கப்படும் அவர்களது தொடர்புகள் குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து 24 மணித்தியாலங்களும் பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த 37வயதான ஒருவர் சிரியாவில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். இதனையடுத்து இலங்கையர்கள் எவரும் ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக உறுதியான தகவல்கள் எதுவுமில்லை என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.