அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு-

rajithaஅரச சேவையாளர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 65ஆக உயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்பிக்க இருப்பதாக சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு தான் எதிரானவர் என்று அவர் கூறியுள்ளார். பானந்துறை ஸ்ரீ சுமங்கள ஆண்கள் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். கெம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களில் 85 வயதிலும் அறிவை வழங்கக்கூடிய பேராசிரியர்கள் இருப்பதாகவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய சரியான வயதில் இலங்கை அரச சேவையாளர்கள் ஓய்வு பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் ஆஜர், குமார் குணரட்ணம் விளக்கமறியலில்-

kumar gunaratnamமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சாட்சி வழங்குவதற்காக கடற்படை அதிகாரிகள் சிலரும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினமும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகளுக்கான ஆஜராகியிருந்தார். இதேவேளை முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னம் எதிர்வரும் 21ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 4ம் திகதி குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் செயற்பாடுகளுக்கும் ஜனாதிபதிக்கும் ஐ.நா செயலாளர் பாராட்டு-

ban ki moonஇலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்டபான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்நாட்டு மக்களுக்கு நீண்ட கால அமைதி, நிலையான தன்மை மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட, விரிவான சீர்திருத்தப்பட்ட வேலைத்திட்டத்திற்கான அரசின் அர்ப்பணிப்பை ஐ.நா செயலாளர் மதிப்பதாக தெரிவித்துள்ளார். நல்லாட்சியை ஏற்படுத்துதல் மற்றும் பலமிக்க சகவாழ்வுக்காக கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் முன் வைக்கப்பட்ட யோசனைகளின் முதல் கட்டம் செயல்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்வதுடன் அதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் ஐநா செயலாளர் கூறியுள்ளார். நீண்டகால அரசியல் தீர்வுக்காக நாடு பூராகவும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறைக்கு உதவியளிப்பதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான அரசின் முயற்சிகளை பாராட்டியுள்ள பான் கீ மூன் அதற்காக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்க லே இயக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு-

sqஸ்டிக்கர் இயக்கமாக அண்மையில் தொடங்கப்பட்ட ‘சிங்க லே’ இயக்கத்தினர், நேற்று முன்தினம் மாலை, ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது இயக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். யக்கலமுல்லே பாவர தேரரே இந்த சிங்களே இயக்கத்தின் தலைவர் ஆவார். அவர், ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேசியது இதுவே முதல் தடவையாகும். தமது இயக்கம் ‘சிங்கள ஜாதிக பலமுலுவ’ என அழைக்கப்படும் என்றும் இது, புத்தரின் போதனையான ‘சகல உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் இதன்போது கூறினார். முன்னர் பொதுபல சேனாவின் செயற்பாட்டாளராக இருந்த மிதில்லே பஞ்ஞலோக்க தேரரே இப் புதிய இயக்க பொதுச் செயலாளர் ஆவார். அரசியல் பூசல்களைத் தமது இயக்கத்தினுள் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவ்வியக்கம் இதன்போது அறிவித்துள்ளது.