கலாசாரத்தைப் பாதுகாக்கும் பணியில் தமிழ் மக்கள் பேரவை-

peravaiதமிழ் மக்கள் பேரவையானது தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது. அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது கடந்த 2 ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தயாரிக்கும் நிபுணர்களடங்கிய உபகுழுவின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தது. அந்த உபகுழுவின் பணி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் உயரிய நோக்குடன் துறைசார் வல்லுநர்களடங்கிய உபகுழுவை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்குழுவில் கலை, கலாசாரத்துடன் சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்களை இணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஒரு இனத்தின் எதிர்கால வளமும் வாழ்வியலும் தனித்து அரசியல் உரிமைகளால் மட்டும் தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை. மாறாக அந்த இனத்தின் மரபுரிமைகளும் கலை, கலாசாரப்பண்பாட்டு அடையாளங்களும் கட்டிக்காக்கப்படுவதிலும் தங்கியுள்ளதென்ற உண்மையை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. இன்றைய சமகால சூழ்நிலையில் எங்கள் இளம் சமூகத்தை வழிப்படுத்துவதில் ஓர் ஆரோக்கியமான சூழல் காணப்படவில்லை. இதனால் இளைஞர்கள் தடம் மாறிப் பயணிக்கக்கூடிய மிக மோசமான சூழ்நிலை காணப்படுகின்றது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்கள் பண்பாட்டு அடித்தளங்களைக் கட்டியெழுப்புவதும் காப்பாற்றுவதும் நடைமுறைக்குச் சாத்தியமாக்குவதும் காலத்தின் கட்டாய தேவையாகும். இவ்வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலை, கலாசாரத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. கலைத்துவப் படைப்புகளும் அதற்கான சந்தர்ப்பங்களும் எங்கள் இளம் சமூகத்தை நிச்சயம் வழிப்படுத்தும் என்பதனைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் கலை, கலாசாரப் பணிக்கு தமிழ் மக்கள் தகுந்த ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்குமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கமைய 0756 993 212 அல்லது 0710 145 723 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோஅல்லது kalaachchaaram@tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.