தோழர் சுந்தரம் அவர்களின் 34ம் ஆண்டு நினைவுநாள் சுழிபுரத்தில் அனுஷ்டிப்பு-
மறைந்தும் மறையாது மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து வரும் தோழர் சுந்தரம் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு நாள் வட்டுக்கோட்டைத் தொகுதி தோழர்களால் நேற்று (07.01.2016) சுழிபுரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ் நிகழ்வு தோழர் கண்ணன் அவர்களது தலைமையில் அன்றுமாலை 6.30 மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக தோழர் சுந்தரம் அவர்களின் நிiவுருவப்படத்திற்கு முன்பாக அமரரது சகோதரனின் புதல்வர் போ.சிவகுமார் நினைவுச் சுடரினை ஏற்றினார். தொடர்ந்து தோழர் சின்னக்குமார், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் திரு. பா.கஜதீபன் ஆகியோர் நினைவுச் சுடர் ஏற்றினர். தொடர்ந்து அமரர் தோழர் சுந்தரம் அவர்களின் திரு உருவப்படத்திற்கு அமரரது சகேதரனின் புதல்வர் போ.சிவகுமார் அவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் தோழர்கள் பொதுமக்கள் உறவினர் என பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. இவ் நிகழ்வின்போது வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களின் உரையும், ஜேர்மனியிலிருந்து தோழர் ஜெகநாதன், கொழும்பிலிருந்து புளொட் தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. மேலும் அமரரது நினைவாக பாடசாலை மாணவர்கட்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து தோழர் சுந்தரம் அவர்களின் நினைவு இன்றுபோல் என்றும் தொடரும் வகையில் தோழர் கண்ணன் அவர்களால் தென்னைமரக் கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் தோழர் சுப்புவின் நினைவுச்சிலை அமைக்கும் பணியினை ஆரம்பிக்கும் பொருட்டு அமரரது சகோதரனின் புதல்வர் போ.சிவகுமார் அவர்கள் சிறுதொகை நிதியினை வழங்கிவைத்தார்.