ஹிருணிகாவை கைதுசெய்ய முடியாது-அமைச்சர் ராஜித-

hirunikaகொழும்பு தெமட்டகொடயில் இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவைக் கைது செய்யுமாறு, எதிரணியினராலும் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டுவரும் கோஷத்துக்காக, அவரைக் கைது செய்யமுடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘மஹிந்த ராஜபக்ஷவை ஏன் கைது செய்யவில்லை, நாமல் ராஜபக்ஷவை ஏன் கைது செய்யவில்லை என்று எல்லோரும் கோஷமெழுப்பி வருகின்றனர். எனினும், அவையனைத்தும் அரசாங்கத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டள்ளது’ என்று அவர் பதிலளித்தார். ‘அவ்வாறு எடுத்தவுடன் கைதுசெய்வதற்கு இது ராஜபக்ஷவினுடைய அரசாங்கம் அல்ல, இது சிறிசேனவினுடைய அரசாங்கம்’ என்றும் அவர் கூறினார். சாதாரண மனிதன் ஒருவன் தவறு செய்தால், அவரை உடனடியாக கைதுசெய்யும் அரசாங்கம், இதில் மாத்திரம் பின்தங்கி இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றதே’ என்று வினவியதற்கு, ‘அவ்வாறு சாதாரண மனிதரையும் கைது செய்யமுடியாது. உதாரணத்துக்கு அவன்ட் கார்ட்டுடன் சம்பந்தப்பட்டவர்களே இப்போது வெளியில் தான் இருக்கின்றார்கள்’ என்று அவர் பதிலளித்தார். ‘தற்போது சிங்க லே என்றவொரு இனவாதச் செயல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பிலான கருத்து யாது’ என்று வினவப்பட்டதற்கு. ‘இது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர், விசாரணை செய்து வருகின்றனர். இதில் கவலையான விடயம் என்னவெனில், இது அரசாங்கத்துக்கு எதிராக இருந்தால் பரவாயில்லை. எனினும் இனவாதத்தை தூண்டுவது போல நடந்து கொள்வது சரியானதல்ல’ என்று தெரிவித்துள்ளார்.