பாலத்தடிச்சேனை பொதுமக்களின் காணிகள் படையினரால் ஒப்படைப்பு-
திருகோணமலை மூதூர் பிரதேசத்திலுள்ள பாலத்தடிச்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த காணிகளும் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களும் 25 ஆண்டுகளின் பின்னர் உரிமையாளர்களிடம் நேற்று மீளக் கையளிக்கப்பட்டன. 1990ம் ஆண்டு தொடக்கம் இராணுவ முகாம் அமைந்திருந்த குறித்த காணிகளில், இறுதியாக முகாமிட்டிருந்த இராணுவத்தின் 5வது ஆட்லெறி படைப்பிரிவு தற்போது வெளியேறியுள்ளது. 1985ம் ஆண்டு மூதூரில் இடம்பெற்ற இன வன்முறைகளை அடுத்து பாலத்தடிச்சேனை கிராம மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய நிலையில், இராணுவம் அந்த இடத்தில் முகாம் அமைத்திருந்தது. இங்கிருந்த ஆலயம், தோட்ட நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்களை ஒரு தொகுதியாகக் கொண்டு பாதுகாப்பு அரண்களும் வேறு கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களின் காணிகளின் எல்லைகளை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக அம்மக்கள் கூறியுள்ளனர். கிழக்கு மாகாணம் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட பல்வேறு தரப்பினரிடம் காணிகளையும் குடியிருப்புகளையும் மீள கையளிக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அவ்வேளைகளில் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஓராண்டு பூர்த்தியடையும், நாளில் தங்களுக்கு காணிகள் மீள கிடைத்திருப்பதாகவும் காணி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.