ஹிருணிகா பிரேமச்சந்திர கைதாகி பிணையில் விடுவிப்பு-

hirunikaஇன்றுகாலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்றுகாலை கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டது-

trainகுருநாகலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை பகுதிகளுக்கிடையில் தடம்புரண்டுள்ளது.

இன்றுகாலை 9 மணியளவில் ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலை மீண்டும் தண்டாவாளத்தில் நிறுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது. ரயில் தடம்புரண்டதை அடுத்து தடைப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன் பிரதான பாதையின் போக்குவரத்து வழமை போன்று இடம்பெறுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை-இராணுவதளபதி-

army chiefநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவத்தளபதி கிரிசாந்த டி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நிருபர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குகின்றது.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான வாய்ப்பில்லை. இராணுவம் அதற்கு ஒருபோதுமே அனுமதிக்காது,

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இராணுவம் தொடர்ந்தும் உதவும் என இராணுவத்தளபதி கிரிசாந்த டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2600 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்-

graduateஅரச சேவையில் மேலுமொரு தொகுதி பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, 2600 பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

அண்மையில் பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில், நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதில் 2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இவர்களுக்கான நியமனங்களை பிரதமர் வழங்கி வைக்கவுள்ளார்.