ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க கோரிக்கை-

janathipathiபாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தெரிவித்துள்ளார். பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை எதிர்வரும் மார்ச் 6ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதுவரை குறித்த ஆணைக்குழுவுக்கு சுமார் 1400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, இவற்றில் 900 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 600 முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் வரையறைக்கு உட்பட்டவையல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள ஆணைக்குழுவின் காலத்தை தொடர்ந்தும் நீடிக்கவுள்ளதாக, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர லெசில் டீ சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் கோரிக்கை-

akneligodaகாணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் ஒன்றை ஏற்படுத்துமாறு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியார் சந்தியா எக்னலிகொட அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புலமைப்பிரிசில் திட்டத்தை இந்த மாதத்திற்குள்ளே ஆரம்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியார் சந்தியா எக்னலிகொட தலைமையில் காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே சந்தியா எக்னலிகொட இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் இலங்கையில் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லும் செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் குற்றச்செயலாக அறிவிக்குமாறும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை இப்போராட்டத்தை தொடர்ந்து, காணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் ஒன்றை ஏற்படுத்துமாறும், காணாமல் போனோரின் தகவல்களை வெளியிடுமாறும், வலுக்கட்டாயமாக கடத்திச்செல்லும் செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் குற்றச்செயலாக அறிவிக்குமாறும் கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மகஜர் கையளித்தனர்.

அதிகாரப் பகிர்வுடன் தீர்வு புதிய அரசமைப்பில் வேண்டும்-

sampanthanஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.

அதேவேளை, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வுகளுடனான நிரந்தர அரசியல் தீர்வும் இந்தப் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில நாடாளுமன்றின் சபாநாயகர் டெல்மோலங்குலர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக சம்பந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் பேசப்பட்டன என்றும் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக நீதியரசர் ஆஜர், பிணை வழங்கப்பட்டது-

courtsமுன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது வீட்டுப் பணிப்பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து இவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்து. இன்று அவர் நீதிமன்றில் ஆஜரானபோது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை ஒன்று மற்றும் ஒரு இலட்சம் ஷரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர், நீதியரசர் பதவியிலிருந்து கடந்த 2ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளதாகவும், தனது இளைப்பாறும் கடிதத்தை, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கல்கிஸையிலுள்ள தனது வீட்டில் வைத்து, 2015ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, தன் வீட்டுப் பணிப்பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று, அவருக்கெதிராகக் குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவருக்கெதிராக, இலங்கை வரலாற்றில் வழக்கொன்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, இதுவே முதற்தடவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத நிலை-

mineமுல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படுவதில்லை என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஷரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பகுதிகளில் அதிகளவான பகுதி முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றது.64 கிலோ மீற்றர் பகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றப்பட உள்ளது. அதில் 73 வீதமான பகுதி முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகிறது.

எதிர்வரும் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹலோட்ரஸ் என்ன தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 2020ம் ஆண்டளவில் நிலக்கண்ணி வெடிகள் முற்று முழுதாக அகற்றப்பட வேண்டுமென விரும்புவதாகவும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதன் மூலம் மக்களை மீள்குடியேற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹிருணிகா உட்பட ஒன்பது பேர் நீதிமன்றில் ஆஜர்-

hirunikaகொழும்பு தெமட்டகொடை பகுதியில் நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9பேர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குறித்த கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் டிபென்டர் வாகனத்தை விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இதன்போது மறுப்பு வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கினை மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைப்பு-

prasanthanதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால், சந்தேகநபரை ஜனவரி 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்குமூலத்தின் பிரகாரம், விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார், பூபாலப்பிள்ளை பிரசாந்தனைக் கைதுசெய்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜப்பான் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை-

lanka japanஇலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கடற்பாதுகாப்பு மற்றும் கடல்சார் விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இன்று இடம்பெறும் இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் சிரேஸ்ட் அதிகாரிகளும் பங்குகொள்ளவுள்ளனர்.

இதுதவிர பாதுகாப்பு அமைச்சின் அனுசரனையுடன், கடற்பாதுகாப்பு மற்றும் கடல்சார் விடயங்கள் குறித்த பிறிதொரு சந்திப்பு, நாளை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கைதியைப் பார்க்க ஹெரோயினுடன் சென்றவர் கைது-

arrest120 கிராம் ஹெரோயினுடன் சிறைச்சாலைக்கு உறவினரைப் பார்க்கச் சென்ற இளைஞரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பிடித்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பருத்தித்துறை – மணற்காடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று மாலை யாழ். சிறைச்சாலைக்கு தனது உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, அவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பரிசோதனை செய்தனர்.

இதன்போது, அவரிடமிருந்து ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தற்போது யாழ். பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் கிணற்றில் குதித்த ஜோடி, ஆண் மரணம்-

DFDFDFDFDFDFFயாழ். கோப்பாய் இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாயைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன் பலியாகியுள்ளதோடு, அவரது 21 வயதான காதலி உயிர்தப்பியுள்ளார்.

மாலை வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், உறவினர்களால் இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த இந்த ஜோடி கிணற்றுக்குள் குதித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பொங்கல் புதுமையய் பொங்கட்டும்-

mrs ainkaran (7)தமிழர் தம் வாழ்வியலின் முதல் ஆரம்பமாக அமைவது இவ் தைத்திருநாள். எமது பாரம்பரியங்களும் நம்பிக்கைகளும் வரலாற்றின் வழி வந்த உணர்வுகளும் இவ் திருநாளின் நம்பிக்கையில் தான் பிறக்கின்றது. இவ் நம்பிக்கைகளில் மேல் நாம் கொண்ட பற்றுறுதிகள் வெற்றி தந்து நன்றி செலுத்தும் ஓர் புனிதநாளாக இவ் நாள் அமைந்து விடுகின்றது. இன்று பொங்கிப் பரவும் இவ் புது பெங்கல் போல் எங்கள் வேண்டுகைகளும் என்றோ ஒர் நாள் வெற்றி பெற்று கல்லறைகளுக்குள் கணவுகளைச் சுமந்து காவியம் ஆகிவி;ட எங்கள் மறவர்களின் இலட்சியங்களும் வெல்லும் என்ற உறுதியன நம்பிக்கைகளோடு பெங்கல் பானையில் புது அரிசினை நாம் ஒவ்வொருவரும் மானம் மிக்க தழிழர்களாக இட்டிட வேண்டும். இவ்வாறே நாளும் பொழுதும் விடியலைத் தரும் சூரினுக்கு நன்றி செலுத்துதல் போலும் நாற் திசைகளிலும் நாம் தழிழர் என்ற இலட்சிய வெறிபிறந்திட புதிய பாதை வகுத்த நாயகர்களின் கனவு மெய்பட்டிட எம் மத்தியில் உள்ள குரோதங்களுக்கு அப்பால் கயவர்களால் கறுவறுக்கப்பட்டு உருச்சிதைக்கப்பட்ட எங்கள் நிலங்களில் இனிவருங்காலங்கள் களனி பல விளைந்து சிறந்திவும்,சிறைகளின் இரும்புச் சுவர்களுக்கிiயே விடுதலையின் விடிவிற்காய் உழைத்தவர்கள் வெளிப்பட்டிடவும், உறவுகளுக்காய் செங்குருதியை செந்நீராய் சிந்தி ஏங்கிடும் உள்ளங்களுக்கு நாமும் உறவுகளாய் இணைந்து உறுதிவழங்கிவும் ஒற்றுமையின் பால் உயர்ந்தவர்கள் தரனியில் தழிழர்கள் என்ற வரலாற்றினை உறுதியாக்க எடுப்போம் சபதம் இவ் தைத்திருநாளில்.
என்றும் தழிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை