ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும். – வீரமணி

ramathasஈழத் தமிழர்களான ஆதிக்குடிகளை அன்னியப்படுத்தாமல் அவர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்களின், இஸ்லாமியர்களின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன தலைமையில், அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது.இந்த அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அதன் தலையாய கடமை. பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை முதலிய அடிப்படை உரிமைகள்தான் ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று! அதற்கு எவ்வித குந்தகமோ, தடையோ இல்லாத ஆட்சியாக தனது ஆட்சியை நடத்தவேண்டியது அதன் முக்கிய தேவையாகும்!

சிங்கப்பூர் நாட்டில் எப்படி, பெரும்பான்மை சீனர்களுக்கு இணையாக மலாய்க்காரர்கள், தமிழர்கள், யூரேஷியர்கள் ஆகியவர்கள் சம உரிமை, சம வாய்ப்புள்ள குடிமக்களாகக் கருதப்பட்டு நடத்தப்படுகிறார்களோ அதுபோல, இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம் மக்கள் எல்லோரும் நடத்தப்படுதல் வேண்டும்.

தமிழர்களின் உரிய இடங்கள் – பகுதிகளை அவர்களுக்கே மீண்டும் தந்து, மீள்குடியேற்றத்தில் தனி அவசர அக்கறையை இலங்கை அரசு காட்டவேண்டும். அதைவிட முக்கியம், சிறையில் உள்ள பல்லாயிரக்கணக்கான அல்லது பல நூற்றுக்கணக்கான தமிழர்களை (குற்றம் எதுவும் செய்யாமலே சிறைக் கொடுமை அனுபவிப்பவர்களை) உடனடியாக விடுதலை செய்து, வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்.

எம் அரும் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களின் காயங்கள் இன்னமும் வடுக்களாகக்கூட மாறாத நிலையில், தமிழர் உரிமைகளின் அங்கீகாரம் மிகவும் அவசரம், அவசியம்! இவ்வாறு கூறியுள்ளார்.