ஜனாதிபதி, பிரதமரின் வருகைக்கு யாழில் எதிர்ப்பு; கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்

arpdam_jaff_002ஜனாதிபதி மற்றும் பிரதமர் வலி.வடக்கிற்கு தைப்பொங்கல் விழாவிற்கு வருகை தரவுள்ளதை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று காலை 10.00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

அதனால், மக்கள் கண்ணீருடன் இருக்கும் வேளையில், தைப்பொங்கல் களியாட்டம் தேவையா என கேள்வியெழுப்பி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

காணாமல் போனனோர்களை கண்டறியுமாறும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், முற்போக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் காணாமல் போனோர்களின் உறவினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இந்த புதிய அரசாங்கம் ஒரு அரசியல் கைதியை மட்டும் விடுவித்து விட்டு சர்வதேசத்திற்கு நல்ல பிள்ளையாக தனது முகத்தை காட்டி வருகின்றது என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இதன்போது தெரிவித்தார்.

அதேவேளை இந்த அரசாங்கம் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

arpdam_jaff_002arpdam_jaff_003arpdam_jaff_001