2009ஆம் ஆண்டு காணாமல் போன இரு பிள்ளைகள் ஜனாதிபதியுடன் புகைப்படத்தில்

missing_children_with_maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புகைப்படம் ஒன்றில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் காணாமல் போயுள்ள இரண்டு பேரை தேடிக்கண்டுபிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயங்கரவாதப் புலனாய்வு காவல் துறையினர், காணாமல்போனவர்களின் அன்னையரிடம் உறுதியளித்திருப்பதாக அவர்கள் குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நெடுங்கேணி பெரியமடுவைச் சேர்ந்த காசிப்பிள்ளை ஜெயவதனி, நெடுங்கேணி சின்னபூவரசங்குளத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சந்திராணி ஆகிய இரண்டு தாயார் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினரின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களின் மகள் மற்றும் மகன் தொடர்பான வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது.
காசிப்பிள்ளை ஜெரோமி, யோகேஸ்வரன் மயூரன் ஆகிய இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளனர்.
பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் பிரசுரம் ஒன்றில் மைத்திரிபால சிறிசேன அந்த இருவருடன் ஏனைய சில மாணவ மாணவியரும் இருந்த புகைப்படம் வெளியாகியிருந்தது.
அத்துடன், அதே போன்ற வீடியோ காட்சியொன்றும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டிருந்ததைக் கண்டு இந்தத் தாயார் இருவரும் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு புகைப்படத்திலும் காணொளியிலும் காணப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினர் இந்த அன்னையர் இருவரையும் நேற்று புதனன்று விசாரணை செய்து, அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதுடன் காணாமல் போயுள்ள அவர்களின் பிள்ளைகள் இருவரையும் கண்டுபிடிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கின்றனர்.

வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத நேரங்களில் மாற்றம்.

yaltheviவடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி புதிய நேர விபரங்கள் வருமாறு,
யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து அதிகாலை 05.50 மணிக்கு புறப்பட்டு கொழும்பு கோட்டைவந்து அங்கிருந்து காலை 06.35 இற்கு யாழ் நோக்கி புறப்பட்டு. பிற்பகல் 02.37 இற்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்து, பிற்பகல் 03.20 ற்கு காங்கேசன்துறையை சென்றடையவுள்ளது.
பின்னர் யாழ்தேவி கொழும்பு நோக்கி புறப்படும் போது, காங்கேசன்துறையில் இருந்து காலை 08.25 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து காலை 9.35 இற்கு யாழ்ப்பாணத்தையும், கொழும்பு கோட்டைக்கு பிற்பகல் 06.32 இற்கும் சென்றடையவுள்ளது.
ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம் சேவையில் ஈடுபடக்கூடிய கடுகதிப் புகையிரதம், யாழ்ப்பாணத்திலிருந்து காலை 08.20 இற்கு பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 04.25 இற்கு கொழும்பு கோட்டையை சென்றடையவுள்ளது.
இதுதவிர தலைமன்னாரிலிருந்து புறப்படும் புகையிரதம் காலை 07.30 இற்கு பயணத்தை ஆரம்பித்து, காலை 10.50 இற்கு அநுராதபுரத்தையும், பிற்பகல் 04.05 இற்கு கொழும்பு கோட்டைக்கு சென்றடையவுள்ளது.

இந்தோனிஷிய தலைநகரில் தாக்குதல்

indonesiaஇந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேராவது கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் பதினான்குக்கும் அதிகமான இஸ்லாமிய தாக்குதலாளிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இலக்குவைக்கப்பட்ட இடங்களில் ஐநா கட்டிடம் ஒன்றும், திரையரங்கம் ஒன்றும், ஒரு ஸ்டார்பக்ஸ் சிற்றுண்டி கடையும் அடங்குகின்றன.
துப்பாக்கிதாரிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் சூத்திரதாரியின் பெயரையும் அவர்கள் அறிவித்துள்ளனர். இஸ்லாமிய அரசுக்குள் தனது அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள பஹ்ருண் நயிம் என்ற நபரே இதனை திட்டமிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கறுப்பு உடையில் வந்த நபர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாமே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு குழு கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே, அங்கு வெளிநாட்டு இலக்குகள் தாக்கப்படலாம் என்று எச்சரித்து வந்த பாதுகாப்புத்துறையினர், நகரின் பாதுகாப்பை அதிகரித்திருந்தனர்.

துருக்கியில் காவல்துறை தலைமையகத்தில் கார் குண்டு வெடிப்பு; 5 பேர் பலி

turkeyதென்கிழக்கு துருக்கியில் காவல்துறை தலைமையகத்தில் கார் குண்டு ஒன்று வெடித்ததில் ஐந்து பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரு குழந்தையும் பெண்ணும்கூட இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தியார்பகீர் மாகாணத்தில் உள்ள சினார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான நிவாரணப் பணிகள் தற்போது நடந்துவருகின்றன.
பிகேகே எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தீவிரவாதிகளே இந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் என அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுவரை எந்தக் குழுவும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.சினார் மாவட்டத்தின் காவல்துறை வளாகத்தின் நுழைவாயிலில் இந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பின் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களும் சேதமடைந்தன. அதில்தான், ஒரு குழந்தையும் பெண்ணும் கொல்லப்பட்டனர்.
குண்டு வெடித்த பிறகு, காவல்துறை தலைமையகம் மீது ராக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டது.
அருகில் உள்ள மார்தின் மாகாணத்தின் மித்யாத் நகரத்தில் மற்றுமொரு காவல்நிலையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது என துருக்கிய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை.
கடந்த சில மாதங்களாகவே தியார்பகிர் மாகாணத்தில் பிகேகே பிரிவினைவாதிகளுக்கும் துருக்கிய ராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் நடந்துவருகின்றன.
கடந்த ஆண்டில், பாதுகாப்புக் காரணங்களுக்காக தியார்பகிர் நகரத்திலும் தென்கிழக்கு துருக்கியின் வேறு சில பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ராணுவத்திற்கும் பிகேகேவுக்கும் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஜூலையில் முறிந்தது. அப்போதிலிருந்து பிகேகேயினர் உள்ள வடக்கு ஈராக் பகுதியை துருக்கிய ஜெட் விமானங்கள் தாக்கிவருகின்றன. தரை வழியாகவும் ராணுவம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழுவினர் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்கக் கூட்டுப் படையில் துருக்கியும் இருக்கிறது.
ஆனால், துருக்கி பெரும்பாலும் பிகேகே மீதுதான் தாக்குதல் நடத்துவதாக குர்துகள் கூறிவருகின்றனர். ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் மீது குர்துகளும் தாக்குதல் நடத்திவருகின்றனர்