தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு; அது யாழ்ப்பாண நிகழ்வல்ல – ரணில்

தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு. அது யாழ்ப்பாண நிகழ்வோ இந்து நிகழ்வோ அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

உலக சுற்றுச்சூழலில் மாற்றங்கள் நிகழ்வது போன்று உலக அரசியலிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவ்வாறு மாற்றமடையும் சூரிய வெளிச்சம் தற்போது முழு இலங்கைக்கும் கிடைத்துள்ளதுடன், அனைத்து இலங்கை பிரஜைகளும் தற்போது சூரிய வெளிச்சத்தை அனுபவிப்பதாக அவர் கூறினார்.

பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்தது இருண்ட யுகத்தில் என்றும் சூரிய வெளிச்சம் இருக்கும் தற்போதைய சூழலில் இலங்கைக்கு வருகை தருமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.

பாற்சோறு உணவை விட தைப்பொங்கல் உணவு சுவையானது என்றும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் காலத்தில் இலங்கையின் பொருளாதார நிலை சிறந்த மட்டத்தில் இருக்கும் என்றும் வடக்கு கிழக்கிற்கு ஒரு விசேட பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நான் தீவிரவாதியல்ல சிங்கள மக்களுடன் எதிர்ப்போ கோபமோ இல்லை- விக்னேஸ்வரன்

jaffna_pongall_009தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில்,

சர்வமதங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கதே. 1960 களில் சர்வமத சம்மேளனத்தின் உப செயலாளராக நான் இருந்தேன்.பிரதமர் டட்லி சேனாநாயக பிரதமராக இருந்த காலத்தில் எங்கள் சம்மேளனம் இதையே செய்தது. மற்றவர்களின் மத நிகழ்வுகளில் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.

அப்போதைய மல்வத்த மகா நாயக்கதேரோவை யாழ்ப்பாணம் அழைத்து வந்து நயினாதீவுக்கு அழைத்துச் சென்றோம். அவர் இந்துக் கோயிலையும் தரிசித்து புத்த விகாரைக்கும் விஜயம் செய்தார்.

இப்போது அந்த சம்மேளனத்தின் உறுப்பினர்களில் உயிரோடு இருப்பவர் நான் மட்டுந்தான் என்று நினைக்கின்றேன். அதன் பின்னர் நிலை மாறிவிட்டது.

இன்றைய நிலையை நாம் எடுத்துப் பார்த்தால் எமது வடமாகாணம் அதன் அவலங்களிலும் ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீங்கப்படவில்லை,த னியார் காணிகளும் மக்கள் நலம் சார்ந்த கட்டிடங்களும் விடுவிக்கப்படவில்லை, காணமற்போனார் விபரங்களை அவர்களின் சுற்றத்தார் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

முன்னால் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னமும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை, மாகாணத்தின் அலுவல்களில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு குறைந்தபாடில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படவில்லை,மீனவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை,விதவைகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படவில்லை.

இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவல நிலையைப் பட்டியல் இட்டுக் கூறிக் கொண்டே போக முடியும்.

எம்மால் பதவிக்குக் கொண்டு வரப்பட்ட இந்த அரசாங்கம் ஜனநாயக சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

எனினும் மூன்று விடயங்கள் இன்று மிக முக்கிய நிலையைப் பெற்றுள்ளன. ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் மாற்றம் ஏற்படுத்தல், தமிழ் மக்களின் பிரச்சினையை ஐ.நா. உரிமை சாசனங்களின் அடிப்படையில் நிரந்தரமாகத் தீர்த்து வைத்தல், போர்க் குற்ற விசாரணைகளை 2015 செப்டம்பர் மாத ஐ.நா. இணைந்த பிரேரணையின் அடிப்படையில் முறையாக நடத்துவித்து நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியனவையே அவை.

இவற்றை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது எமக்குத் தெரிந்ததே. ஆனால் எவ்வாறான அரசியல் மாற்றம் நடைபெறும், எவ்வாறான தீர்வு எமக்குக் கிடைக்கும், போர்க் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவார்களா என்பதில் எமக்கு மயக்கநிலையே இருந்து வருகின்றது.

தென்ஆபிரிக்காவில் இப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் தீர்க்க வேண்டியிருந்த போது அவற்றை அரசியல் ரீதியாகத் தீர்த்து விட்டே ´உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை´ அமைத்தார்கள்.

இங்கு 67 வருடகால பிரச்சனைகள் தொடர்ந்திருக்கும் போதே இப்பேர்ப்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். மக்களின் மனமாற்றம் அவசியம் என்பதை நாங்கள் உணர்கின்றோம்.

ஆனால் உண்மையில் எமது மக்களில் பெரும்பான்மையினர் தைப்பொங்கல் நாளில் விழாக் கொண்டாடும் மனோநிலையில் இல்லை என்பதே யதார்த்தம்.

எடுக்கக் கூடிய பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர்கள் எடுக்காது இருப்பதால் இந்த மனோநிலைக்குள் நாங்கள் அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கின்றோம்.

அவற்றை எடுக்க எமது மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நிலையை கொழும்பில் இருந்து உணர முடியாது.

என்னைப் போல் கொழும்பில் பிறந்து வாழ்ந்து விட்டு இங்கு வந்து சாதாரண மக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் போதுதான் அவர்களின் அவலங்கள், ஆற்றாமைகள், சிந்தனைகள், சினங்கள் யாவையும் புரிகின்றன.

என்னை என் கட்சியின் ஒரு பகுதியினரும் ஊடகங்களூடாக மூளை சலவை செய்யப்பட்டுள்ள வட,தென்னிலங்கையின் ஒரு பகுதியினரும் ஒரு தீவிர போக்குடையவர் என்கின்றார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் நான் தீவிரவாதியல்ல. எம் மக்களின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் ஒருவன் நான்.

ஐம்பத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டத்தரணியாகப் பதவியேற்ற நான் உச்ச நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றிய பின் இன்று எமது மக்களின் வழக்கைக் கையேற்றிருக்கின்றேன்.

தேர்தல் காலங்களில் தான் 2013ல் எனது வழக்குக் கோப்பு எனக்குத் தரப்பட்டது. அது தான் எமது தேர்தல் விஞ்ஞாபனம். அதன் அடிப்படையில்த்தான் நான் என் வழக்கைக் கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றேன்.

எமது மக்களின் மனோ நிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம், எமது 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னெடுக்கும் வண்ணம் எனது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தேர்தலில் ஒன்றைக் கூறி நடைமுறையில் இன்னொன்றிற்கு உடன்படுவதாக இருந்தால் நாங்கள் மக்களின் புதியதொரு ஆணையைப் பெற வேண்டும்.

அவ்வாறு பெறாதவிடத்து என்னை ஆற்றுப்படுத்திய அந்த ஆவணத்தின் அடிப்படையிலேயே எனது நடவடிக்கைகளைக் கொண்டு போக வேண்டும். அதையே நான் செய்துகொண்டும் வருகின்றேன்.

எனக்குச் சிங்கள மக்களுடன் எந்த வித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்களின அடிப்படை உரித்துக்களை, அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முன்வராவிட்டால் அதனைச் சுட்டிக் காட்டாது என்னால் இருக்க முடியாது.

67 வருடங்களாக நாங்கள் எமது மக்களின் உரிமைகளை புறக்கணித்து வந்துள்ளோம். பேச்சுவார்த்தை, உடன்படிக்கைகளில் தருவதாகக் கூறியவை எவையும் இன்னமுந் தந்தபாடில்லை. தந்திருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

எனினும் எமது மத ரீதியான ஐக்கியமும் ஒன்றிணைப்பும் மென்மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வர நான் வாழ்த்துகின்றேன். அதே நேரத்தில் எமது மக்களின் ஆழ வேரூன்றியிருக்கும் பிரச்சனைகளை உரிமைகளின் அடிப்படையில் தீர்க்க யாவரும் முன்வர வேண்டும் என்றார்.