அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக நீங்களும் ஆலோசனை வழங்கலாம்

Contitionஅரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்காக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி இந்த வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 22ம் திகதி வரை கொழும்பு, கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்வாங்கு நடவடிக்கை இடம்பெறும் என்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்கயை உள்வாங்கும் குழு தெரிவித்துள்ளது.

காலை 09.30 மணிமுதல் 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இதில் அனைத்து பொது மக்களும் இணைந்து கொள்ளுமாறு அந்தக் குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இது தொடர்பாக 0112 437 676 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் 0112 328 780 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது – ஹியூகோ ஸ்வைர்

 Hugoநல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேர்தலுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

கிளிநொச்சியில் சில குடும்பங்களை சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி வருகிறார்கள்.

தற்போது பொதுமக்கள் அச்சமற்ற சூழலில் இருக்கிறார்கள். ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றன.

நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு சிறந்த நாடு உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கை சிறந்த எதிர்காலத்தை எட்டுவதற்காக பிரித்தானிய அரசாங்கம், பிரித்தானிய மக்கள் அனைவரும் எம்மால் முடியுமான எத்தகைய உதவிகளையும் வழங்கத் தயாராகவுள்ளோம்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், மனித உரிமைகளை மேம்படுத்தல், பொறுப்புக்கூறல், ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நாம் தொடர்ந்தும் பங்களிப்புக்களை வழங்குவோம்.