தென்னாபிரிக்க உயர்தானிகர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் சந்திப்பு-

sampanthanஇலங்கைக்கான தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் ஜெப் டொஜ், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, உத்தேச அரசியல் யாப்பு மற்றும் நல்லிணக்கம் உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பொறுப்புகூறல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலக முடியாது எனவும் அந்த பிரேரணையிலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் அப்படியே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அந்த தீர்வானது அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக அமைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் அக்கறையுடன் இருப்பதாக கூறிய உயர் ஸ்தானிகர், தென்னாபிரிக்க அரசானது, இந்த விடயம் தொடர்பில் எந்த வேளையிலும் தனது ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார் நல்லிணக்கம் தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுபவங்கள் இலங்கைக்கு அவசியமானது என இரா.சம்பந்தன் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வருடங்களின் பின் மன்னார் அபிவிருத்திக் குழுக்கூட்டம்-

mannarமன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் இன்று நடைபெற்றுள்ளது.

அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கே.கே மஸ்தான் ஆகியோர் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.

எனினும், இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லையென கூறப்படுகின்றது.

இன்றைய கூட்டத்திற்கு வட மாகாண அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும் கூறப்படுகிறது. எனினும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர் குணவர்த்தன காலமானார்-

ertrtrகொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன காலமானார்.

இவருக்கு வயது 70 என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, பொது வேட்பாளராக, அன்றைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்.

இதன்படி மைத்திரிபால சிறிசேன தனது முடிவை அறிவிக்கும் பொருட்டு நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் குணவர்த்தனவும் கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து தேர்தலில் வெற்றியடைந்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும், புதிய அரசாங்கத்தில் முக்கிய இடம்பிடித்திருந்த இவர், பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

பின்னர் காணி அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. எனினும் அண்மைக் காலமாக சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குணவர்த்தன இன்று இயற்கை எய்தியுள்ளார்.

இராணுவ வாகனம் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி-

accidentமன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் மீடியா பண்ணைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்

இந்தச் சம்பவம் இன்றுகாலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த இராணுவத்தின் பேருந்தும் கொழும்பிலிருந்து வந்த கார் ஒன்றுமே நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முன்னிலை சோசலிசக் கட்சி ஆர்ப்பாட்டத்தின்மீது நீர்தாரை-

waterகொழும்பு கோட்டை – லோட்டஸ்ட் வீதிப் பகுதியில், முன்னிலை சோசலிசக் கட்சியினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் போது, பொலிஸாரால் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வைத்தே, ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்ய வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்டோர்க்கு நோட்டீஸ்-

human rightsஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகம உள்ளிட்ட சில அதிகாரிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சுக்கு முன்னால், எச்.என்.டீ.ஏ மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட, பொலிஸ் அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.

இதன்போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தீர்மானித்துள்ளது.

இதன்படி இவர்களை எதிர்வரும் பெப்ரவரி 15ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் ஜூனில் நடைபெறவுள்ளது-அமைச்சர் பைசர் முஸ்தபா-

faiser mustafaஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ளதோடு, அது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல் மாதமளவில் வெளியிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஏப்ரலுக்கு முன்னர் எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்யுமாறு, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும் பழைய தேர்தல் முறையின் கீழ், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த எந்தவொரு திட்டமும் இல்லை எனவும் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.