ஆயுத மோசடி புகாரின் முக்கிய சாட்சி இலங்கையை விட்டு வெளியேறினார்
 
lankaஇலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தற்போதைய செயலாளருமான தமயந்தி ஜயரட்ன, இரகசியமாக இலங்கையைவிட்டு வெளியேறியிருப்பது ரக்னா லங்கா விசாரணைகளுக்கு பாதகமாக அமையாது என்று ஜனாதிபதி விசேட விசாரணைப் பிரிவின் செயலாளர் லெசில் டி சில்வா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்தின் ஆயுத மோசடி விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி விசேட விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான தமயந்தி ஜயரட்ன, நாட்டைவிட்டு இரகசியமாக வெளியுள்ளார் என தகவல் வெளியானதன் பின்னணியில், அது தொடர்பில் லெசில் த சில்வாவிடம் பிபிசி தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் விநியோகத்தது தொடர்பான விசாரணையில், தமயந்தி ஜயரட்னவிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வெளிநாடு செல்ல விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்த தமயந்தி மேலிடத்திலிருந்து அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னரே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என்றும் தெரிவித்தார். விசாரணைக்கு அவரது ஒத்துழைப்பு மேலும் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் லெசில் த சில்வா விளக்கமளித்தார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

Ranilஇலங்கையுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடீஷ் கூறியுள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்படுத்தப்படவுள்ள ஒப்பந்தத்தினூடாக, இலங்கையின் அபிவிருத்திக்காக புதிய சந்ததியினருக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு துறைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பு செய்வதற்கு விஷேட குழுவொன்றை விரைவில் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.