Posted by plotenewseditor on 24 January 2016
Posted in செய்திகள்
ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர், போக்குவரத்து பாதிப்பு
ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர்.
தென் கொரியாவில் வீசும் கடும் பனிப் புயலால் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் காரணமாக ஜப்பானிலும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மிதமான வெப்ப நிலைக்கு பழக்கமான ஹாங்காங் வாசிகளும் வெப்பநிலை மூன்று டிகிரிகளுக்கு குறைந்ததை அடுத்து குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். சீனாவின் பல இடங்களில் தொடரும் பனிப் பொழிவு கடந்த 60 ஆண்டுகளில் இந்த அளவுக்கு அங்கு வெப்பம் குறைந்தது இல்லை.
சீனாவின் பல பகுதிகளிலும் கடுமையான காலநிலை நிலவி வருவதால், அரசு இரண்டாவது அதியுச்ச வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலி
அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பனிப்புயலில் ஒன்றாக கருதப்படும் குளிர்கால பனிப்புயல் தாக்கியதில் கிழக்கு கடற்கரையோரப் பிராந்தியத்தின் அன்றாட வாழ்க்கை ஸ்திம்பித்துள்ளது. அமெரிக்காவில் பயங்கரமான காற்று மற்றும் பனிப்பொழிவுடன் சம்பந்தப்பட்டதாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளன.
லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சில இடங்களில் படிந்த ஒரு மீட்டர் உயரம் வரையிலான பனி காரணமாக ரயில்களும், பஸ்களும் மற்றும் விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நியூயார்க்கில் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியகம் மற்றும் திரையரங்குகள் மூட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. சூதாட்ட மையங்களும் மூடப்பட்டன.
இப்போது இந்த பனிப்புயல் குறைந்து அத்திலாந்திக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற போதிலும் அதன் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதே நேரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 பதிவாகியிருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.