கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்கள் கவனயீப்புப் போராட்டம்-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் கிழக்குமாகாண கல்வி வலயங்களில் பணியாற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் சுமார் 250க்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். அவ்விடத்திற்கு வருகைதந்த மாகாண கல்விப் பணிப்பாளர் நிசாம் மற்றும் கல்வி அதிகாரிகள் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் காணி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய ஆலோசகர்கள் மகஜர்களை கையளித்தனர். இவ்விடயத்தினை கல்வி அமைச்சுக்கு தெரிவித்து உறுதியான பதிலைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்தது. இதேவேளை, இலங்கையின் கல்விக்கொள்கையை பாடசாலைகளில் வகுப்பறையில் அமுல்நடத்தி ஒழுங்குபடுத்தும் பணியை ஆசிரிய ஆலோசகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் தொழில் அதிபர் பணி போன்றவற்றைவிட ஆசிரிய ஆலோசகரின் சேவை தனித்துவமானது. இதற்கென ஒரு தனியான சேவை ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பது 1960ஆம் ஆண்டில் இருந்து விடுக்கப்படும் வேண்டுகோளாகும். இதற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அவைகளில் இச்சேவை ஆரம்பிக்கப்பட முடியும் என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தொடரப்பட்ட வழக்கில் இச்சேவை வழங்கப்படுவதற்கு சாதகமான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இச்சேவையை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்தில் அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் பிரகடனம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.