மேலதிகமாக 373,712 பேர் வாக்களிக்கத் தகுதி-

vote2015ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 373,712 பேர் கடந்த வருடத்திலும் பார்க்க மேலதிகமாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் 2015ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைவாக 15,421,202பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளர் 2014ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் ஒரு கோடியே 15,047,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 2015ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹம்மட் தெரிவித்துள்ளார். 1,680,887பேர் கம்பஹா மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 1,640,946 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதேவேளை 2015 ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் குறைந்தளவிலான வாக்காளர்கள் வன்னி தேர்தல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். வன்னி மாவட்டத்தில் 2 இலட்சத்து 201 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

பரணகம ஆணைக்குழு கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை-

maxwel paranagamaகாணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, தமக்கான கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளமையால், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தமது ஆணைக்குழு முன்னிலையில் முன்வைத்த 14000 முறைப்பாடுகளில் 5000 முறைப்பாடுகள் குறித்தே விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக மக்ஸ்வெல் பரணகம செவ்வியொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய இந்த ஆணைக்குழு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆணைக்குழுவின் கால எல்லை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதியுடன் அதன் கால எல்லை, மீண்டும் நிறைவடையவுள்ளது.

வெள்ளை வான் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் கைது-

school vanயாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியொருவரின் வீட்டுக்குச் சென்று வெள்ளை வானில் கடத்துவோம் என்று அச்சுறுத்தல் விடுத்த மூவரை, இன்று காலை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதான மூவரும், 28, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதியினைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர். கடந்த 16ஆம் திகதி இராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள யுவதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ள இந்த மூவரும், உன்னை வெகுவிரைவில் வெள்ளை வான் கொண்டு வந்து கடத்துவோம் என மிரட்டிச் சென்றுள்ளனர். எனினும், குறித்த யுவதி வாகனத்தின் இலக்கத்தினை குறிப்பெடுத்து வைத்துள்ளதுடன், இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். வாகன இலக்கத்தினை அடிப்படையாக வைத்து துரித விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன், வாகனத்தையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் நிதியுதவி-

gffgfஇலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியால் பெற்றுக் கொடுக்கப்படும் நிதி உதவியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2017ம் ஆண்டுக்காக இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக பெற்றுக் கொடுக்க, ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்த போதே, அந்த வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் மோன் மொக் சோய் இதனைக் கூறியுள்ளார்.

பெருந் தெருக்கள், குடிநீர் வேலைத்திட்டம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட சில துறைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே இந்த நிதி வழங்கப்படுவதாக நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு புதிய குழு அமைப்பு-

sivajiபுதிய அரசியலமைப்பு தொடர்பில் வடக்கு மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக வட மாகாண சபையால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய வட மாகாண சபை அமர்வின் போதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்களாக 19 பேர் இதில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ் பல்கலையில் பௌத்த விகாரை வேண்டும்-பௌத்த மாணவர்கள் ஒன்றியம்-

tttயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி, சுவரொட்டிகள் சில ஒட்டப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மரங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மாணவர் ஒன்றியம் என்று அந்த சுவரொட்டிகளின் கீழ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.