குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவர்-பிரதமர்-

ranil (5)எதிர்வரும் மே மாதமளவில் யுத்த குற்றங்களுக்கான விசாரணை பொறிமுறை அமுலாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “செனல் போ” தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அண்மையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளக பொறிமுறைக்குள் அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதில் வழங்கிய பிரதமர் சர்வதேச நீதிபதிகளை தாங்கள் நிராகரிக்கவில்லை என குறிப்பிட்டார். அத்துடன் ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது. இந்த விடயத்தில் மக்களின் நன்மை கருதியே செயற்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை, இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை கணிப்பிட்டிருந்தமை குறித்து வினவப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய பிரதமர் இறுதி யுத்தத்தில் பாதியளவான பொது மக்கள் பலியானமை உண்மையே. எனினும், நாற்பதாயிரம் பேர் இறந்தனரா? என்பதில் சந்தேகம் இருக்கிறது. இதனை அறிவதற்கு ஆவலாக இருப்பதாக குறிப்பிட்டார். இதேவேளை, காணாமல் போனவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் தின தேசிய நிகழ்வில் பிரதமர் கூறியிருந்தார். இதனை பிரதமர் எவ்வாறு உறுதியாக தெரிவித்தார் எனவும் தடுப்பு முகாம்களில் காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்படவில்லையா? என செனல் போ ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் வடக்கிலோ தெற்கிலோ தடுப்பு முகாம்கள் இல்லை. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 292 பேர் அரசாங்கத்திற்கு தெரிந்தவர்களே. அவர்களை தவிர்ந்த வேறு எவரும் தடுப்பு முகாம்களில் இல்லை என குறிப்பிட்டார். அதேநேரம் யுத்தத்தின் பின்னர் சரணடைந்தவர்கள் தடுப்பு முகாம்களில் காணப்பட்டவர்கள் வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது. அவர்களுக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர்கள் இறந்திருக்க கூடும் என பிரதமர் கூறினார். மீண்டும் கேள்வி எழுப்பிய செனல் போ ஊடகவியலாளர் அவர் ஏன் இறந்தார்கள் என வினவினார். இதற்கு பதில் வழங்கிய பிரதமர் இது குறித்து விசாரணை நடத்தவே காணாமல் போனோர் ஆணைக்குழுவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவும் இருப்பதாகவும் இந்த விடயம் தேடி அறியப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவினரை நோக்கி முன்வைக்கப்படுகின்றது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்களா? என கேள்வி எழுப்பபட்டபோது, தவறிழைந்திருந்தால், ராஜபக்ஷவினர் உள்ளிட்ட அனைவரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார்.