கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம்-(படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 29ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.வியாழேந்திரன் என்.சிறீநேசன், சி.யோகேஸ்வரன், என்.ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். இறந்தவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உறவினர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. கடந்த 1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலையில் பல முனைகளிலிருந்தும் படையினர் முன்னேறிக் கொண்டிருந்தபோது ஐந்து விமானங்கள் தாக்குதல் நடாத்தியிருந்தது. இந்நிலையில் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பகுதி இறால் பண்ணைக்கு சென்ற சிறுவர்கள் முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 82பேர் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருந்ததுடன், 28, 29, 30ஆம் திகதிகளில் அடுத்தடுத்ததாக பலர் படைத்தரப்பால் சுட்டுக்கொல்லப்பட்டு மொத்தம் 170ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.