ஞானசார தேரருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு-

gnanasaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்டகப்பட்டுள்ளது. கொழும்பு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்றுகாலை ஞானசார தேரர் சார்பில் பிணை வழங்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை வழங்க மறுத்துள்ளார். கடந்த 26ம் திகதி ஞானசாரதேரர் கைதுசெய்யப்பட்டதோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 25ம் திகதி இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, நீதவானால் உத்தரவிடப்பட்டது. இதன்படி கடந்த 26ம் திகதி ஞானசாரதேரர் கைதுசெய்யப்பட்டதோடு, இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நிலவெடிப்பு ஏற்பட்ட பிரதேசத்தில் ஆராய்ச்சி ஆரம்பம்-

fgயாழ். அச்சுவேலி, நவக்கிரி பகுதியில் கடந்த 23ஆம் திகதி முதல் ஏற்பட்டு வரும் நிலவெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழுள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் நேற் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். நிலவெடிப்பு இடம்பெற்ற தோட்டப் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொதுமக்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும், 500 மீற்றர் தூரத்தையும் சுற்றி மஞ்சள் பட்டி அடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு தொடர்பில் பணிப்பாளர் கூறியதாவது, ‘இங்கு நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய். இது ஒரு சாதாரண நில வெடிப்பு ஆகும். இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பு மயோசின் சுண்ணாம்பு பாறைகளால் ஆனது. யாழ்ப்பாணத்திலுள்ள நிலாவரை நீருற்று, வில்லூன்றி தீர்த்தக்கேணி, கெருடாவில் குகை என்பன பல மில்லியன் காலத்துக்கு முன்னர் ஏற்பட்ட பாறை மாற்றங்களால் ஏற்பட்டதாகும். நிலத்தின் கீழுள்ள சுண்ணாம்பு பாறையில் ஏற்பட்ட சிறு விரிசலாக இது இருக்கக்கூடும். இது தொடர்பான விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது, நிலத்தடி மண் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, சரியான விடயம் தெளிவுபடுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் 40,000பேர் இறக்கவில்லை-மக்ஸ்வெல் பரணகம-

maxwel paranagamaஇறுதிக்கட்டப் போரின் இறுதி வாரங்களில், பொதுமக்கள் 40,000பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவது புனைவு என ‘பரணகம’ ஆணைக்குழு எனப்படும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சனல்4 தொலைக்காட்சி அலைவரிசையின் தொகுப்பாளர் ஜோன் ஸ்னோவின் அண்மைய இலங்கை விஜயத்தின்போதும் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டதாக, மேற்படி காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவினால் கைச்சாத்திடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததாகவும் கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என நம்பப்படுவது புனைவு என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, யுத்த சூனியப் பிரதேசம் என்ற ஒன்று ஒருபோதும் இருக்கவில்லை என்றும் போரின்போது, புலிகள், ஒருபோதும் யுத்த சூனியப் பிரதேசத்துக்கு இணங்கியிருக்கவில்லை என்றும் எனவே, யுத்த சூனியப் பிரதேசத்தை இராணுவம் தாக்கியது என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தவிர, விசேட விசாரணை அணியொன்றினால் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில், போரின்போது காணாமல்போனதாகக் கூறப்படுவோரின் குடும்பங்களுக்கு தகவல்களை அளிக்கவுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கச்சதீவு விழாவில் பங்கேற்க தமிழகத்திலுள்ள இலங்கையர்க்கு அனுமதி மறுப்பு-

kachchative thiruvilaகச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு வருகை தருவதற்கு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் வட்டாராச்சியார் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெிளியட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது சக்கத்தீவு செல்வதற்கு தமிழக விசைப்படகுகள் மறுப்பு தெரிவித்துள்ளமை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக திருவிழா ஏற்பாட்டாளர் இராமேஸ்வரம் பங்குத் தந்தை சகாயராஜ் குறிப்பிட்டுள்ளார். இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு திருவிழாவிற்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பங்குத்தந்தை கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் தங்களின் ஆவணங்களை உறுதிப்படுத்தி அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு இராமேஸ்வர கோட்டாராச்சியார் ராம்தீபன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் 470 தமிழர்கள் தமிழகத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர்-

imagesகடந்த ஒரு வருட காலப்பகுதியில் தமிழ் நாட்டிலிருந்து 470 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மீள்குடியேற்றத்துறை அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டு ஜனவரியில் தற்போது வரையான காலப்பகுதியில்வரையில் இந்த எண்ணிக்கையானவர்கள், நாடு திரும்பி இருக்கின்றனர்.

இறுதியாக கடந்த 26ம் திகதி 20 வது ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்பி இருந்தனர்.

அதேநேரம், தற்போது தமிழ் நாட்டில் உள்ள 109 அகதி முகாம்களில், 64 ஆயிரம் பேர் வரையில் அகதிகளாக தங்கியிருக்கின்றனர்.