கல்முனை பஸ்நிலைய கட்டிடத் தொகுதியில் சடலம் மீட்பு-

errerகல்முனை பஸ் நிலையக் கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் கூலித் தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் பெரியகல்லாறு 3ஆம் பிரிவைச் சேர்ந்த தம்பிராஜா வரதராஜன் (வயது-44) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். கல்முனை நகரில் பழக்கடையொன்றில் தொழிலாளியாக வேலை செய்கின்ற இவர் கல்முனை பஸ்நிலையக் கட்டிடத் தொகுதியின் மேல் மாடியிலிருந்து கீழே வீழுந்திருக்கலாம் எனவும் அதனால் அவரது தலை பலமாக அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அவரது தலையில் பெரியளவில் அடிபட்ட இரத்தக் காயம் காணப்படுகிறது எனவும் விசாரணைகள் மூலமே மேலதிக தகவல்களை அறியமுடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்க தீர்மானம்-

dfdfdஎதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறும் இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஷ்கரிப்போம் என வட மாகாண, காணாமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. அத்தோடு காணாமல் போனோர் தொடர்பில் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரின் கருத்துக்களையும் வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போன உறவினர்களின் அமைப்பு மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள், கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார். “காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக, பிரதமர் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். அப்படி இறந்திருந்தால் இராணுவத்திடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எவ்வாறு இறந்தார்கள்?. முகாம்களிலும் வீடுகளிலும் வைத்து கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவ்வாறு அவர்கள் இறந்திருந்தால் அதற்கு காரணமானவர்கள் யார்? அதற்கான நடவடிக்கை என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ன? போன்ற பல்வேறு கேள்விகள் காணாமல் போனோரை தேடும் உறவுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு ஏற்பாடு செய்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். காணாமல் போன உறவுகளுக்கு எந்த நீதியும் கிடைக்காது. இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இவ்வமைப்பு தீர்மானித்தது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் கால நீடிப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அந்த ஆணைக்குழுவை உடனடியாக கலைத்துவிட்டு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பங்களிப்புடன், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வட மாகாண காணாமல் போனோரை தேடும் உறவினர்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.