தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டுகோள்-
அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்காதிருக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் கிடைக்கப் பெறுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவிக்கின்றது. மக்களை திசை திருப்பி மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் வழிமுறையாக இது காணப்படுகிறது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை தடுப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் அறிவுறுத்தி இருப்பதாகவும் மக்களை அறிவுறுத்துவதற்காக போஸ்டர் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்கும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் சந்தேகம் ஏற்பட்டால் 1900 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷவிடம் விசாரணை, மஹிந்தவின் ஊடக ஒருங்கிணைப்பாளரிடம் விசாரணை-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவிடம் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்வதற்காகவே நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரணை செய்வதற்காகவே அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கத்திக் குத்தில் ஒருவர் உயிரிழப்பு-
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கில் இரு குழுக்களுக்கிடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,
இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாந்தை கிழக்கின் நட்டாங்கண்டல் சிறாட்டிக்குளம் வயல்வெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் பாண்டியன்குளம் 50 வீட்டுத்திட்டத்தினைச் சேர்ந்த சந்திரபாலன் சந்திரகுமார் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நட்டாங்கண்டலைச் சேர்ந்த தங்கராசா குணதீபன் (வயது 30) என்பவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவில் கேபிள் கார் திட்டம்-
நுவரெலியா நகரத்தை அண்மித்த பிரதேசங்களில் கேபிள் கார் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் நேற்றையதினம் பிற்பகல் நுவரெலியாவில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், 06மாத காலத்துக்குள் இப்பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், அதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக நுவரெலியா நகர முதல்வர் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்துள்ளார்.