இராணுவம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளது-ஜனாதிபதி-
இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிண நேர்காணலில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். யுத்தத்தின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக புலிகள் ஒருபோதும் செயற்படவில்லை. இலங்கையின் இராணுவம் இந்த நியமங்களை மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின்போது பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த எவரேனும் ஒருவரினால் தவறிழைக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து விசாரணைப் பொறிமுறைக்குள் கண்டறியப்பட வேண்டும். தவறிழைத்தமை கண்டறியப்படுமாயின், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதற்கு முன்னரும் நாம் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றோம். எமது நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு அமைவாகவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக விஷேடமாக வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும், என்றாலும் வெளிநாட்டு நபர்களை இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை இருக்காது. எமது நாட்டில் பக்கச்சார்பற்று சுயாதீனமாக செயற்படும் நீதிமன்றம் இருக்கின்றது. அதேபோல் பக்கச்சார்பற்று செயற்படும் வேறு நிறுவனங்களும் இருக்கின்றன. எங்களுக்கு தேவையாக இருப்பது நாட்டுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டில் இருந்து விடுபடுவதே. ஆகவே அந்த விசாரணை நடவடிக்கைகளை தெளிவாகவும் சுயாதீனமானதாகவும் நியாயமான முறையிலும் முன்னெடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். நாம் நீதிமன்றத்தை சுயாதீனப்படுத்தியுள்ளோம். அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்படும் நிலமையை ஏற்படுத்தியுள்ளோம். நான் ஒருபோதும் திருடர்களையும் மோசடிக்காரர்களையும் பாதுகாக்க கூடியவன் அல்ல எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.