ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் சரத் பொன்சேக்காவின் கட்சி-

fonsekaபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் ஜனநாயக கட்சியானது, அடுத்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சரத் பொன்சேக்கா நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், தமது கணவர் அமைச்சுப் பதவியையோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லையென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் பாரியார் அனோமா பொன்சேக்கா தெரிவித்திருந்தார்.

சாய்ந்தமருது பகுதி வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு-

ammunitionஅம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது அல் அமான் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடொன்றின் வளாகத்தில் அமைந்துள்ள மலசலக்கூட குழியொன்றிலிருந்து கழிவுகளை அகற்றியபோதே, மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 16 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 13 வெற்றுத்தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைக்குண்டொன்றும், 33 டி 56 ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மேற்படி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை-ஜனாதிபதி மைத்திரிபால-

maithriயார் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் புதிய அரசியலமைப்பில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 9 யோசனைகளை முன்வைத்துள்ளது.

எனினும் யார் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் சமஷ்டிக்கு இடமேயில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் கைது-

Fishஇலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒன்பது தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் அனலைதீவு வடக்கு கடற்பிரதேசத்தில் இவர்கள் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீனவர்கள் தற்போது கடற்படையினரின் வசம் உள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் யாழ் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.