இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து தலைமன்னார் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்-
உள்ளுர் இழுவைப் படகுகளினால் தொடர்ச்சியாக தலைமன்னார் மீனவர்கள் பாதிப்படைந்து வருவதாகவும், தற்போது உள்ளுர் இழுவைப் படகுகளினால் வறிய மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத்தொகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பாதிக்கப்பட்ட தலைமன்னார் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். தலைமன்னார் மேற்கு மீனவர் சங்கம் மற்றும் தலைமன்னார் ஸ்ரேசன் மீனவ சங்கம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றிணைந்து இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஊர்வலமாக வந்துள்ளனர். பின்னர் தலைமன்னார் மீனவர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை தலைமன்னார் புனித லோறன்ஸ் ஆலய சபையூடாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்தனர். தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சுமார் 450 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராம மக்கள் கடந்த பல வருடங்களாக இந்திய இழுவைப்படகுகளால் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகி வந்த நிலையில் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் பாக்கு நீரிணையின் இலங்கைக்குச் சொந்தமான கடல் வளங்களைப் பாதுகாக்கும் செயற்பாடு துரிதமாக நடை முறைப்படுத்தியமையினால் தற்போதைய சூழ்நிலையில், இந்திய இழுவைப் படகுகளின் வருகை குறைந்து காணப்பட்டமையினால் மிகுந்த நிம்மதியுடன் தமது தொழிலை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது பேசாலை மற்றும் உள்ளூர் இழுவைப்படகுகளின் வருகை தலைமன்னார் கடற்பரப்பில் அதிகரித்துள்ளது. இதனால் தலைமன்னாரைச் சேர்ந்த அதிகலவான மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிப்படைந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் தலைமன்னார் கடற்பரப்பினுள் வருகை தந்த பேசாலை இலுவைப்படகுகள் எமது மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியுள்ளதாகவும், சுமார் 30 இலட்சம் ஷரூபாய் வரை நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே, தொடர்ச்சியாக தலைமன்னார் மீனவர்கள் பேசாலை மற்றும் உள்ளுர் இழுவைப்படகுகளினால் பாதீப்பை எதிர் கொண்டு வருகின்ற போதும் கடற்படை, பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தடை செய்யப்பட்டுள்ள இலுவை மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் சிறு மீனவர்களின் நலனில் அக்கறை செலுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கோரியுள்ளனர்.