வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-

jaffnaயாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், இன்று (இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். வட மாகாணத்தில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில், பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென இவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். அத்துடன், தமது கோரிக்கைகள் மற்றும் வட மாகாணத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரமொன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், தமது பிரச்சினைக்கு நல்லாட்சி அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து, அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் இன்றி இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமில்லை-பிரதமர்-

ranilநல்லிணக்கம் இன்றி பொறுப்புக்கூறல் சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இலங்கை நாடாளுமன்றமே ஆசியாவிலேயே வலுவான நாடாளுமன்றமாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற சர்வதேச கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ள பிரதமர், நாட்டில் நல்லிணக்கத்தையும, பொறுப்புக் கூறுதலையையும் ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் முழுமையான அணுகு முறையின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொறுப்புக்கூறல் இன்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை, நல்லிணக்கம் இன்றி பொறுப்புக்கூறல் சாத்தியமில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இதற்கான முயற்சிகளையே மேற்கொண்டுள்ளோம், இலங்கை மக்கள் நாட்டில் மனித உரிமைகளை மீள ஏற்படுத்தி அதனை வலுப்படுத்துவதற்கான ஆணையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

திருகோணமலையில் ஜேர்மன் நாட்டு உல்லாசக் கப்பல்-

germany shipஜேர்மன் நாட்டு உல்லாசக் கப்பல் ஜேர்மன் நாட்டின் 420 பயணிகளுடன் கூடிய அதிசொகுசு யுரோப்பா 2 எனும் குறூஸ் வகை உல்லாசப் பயணிகள் கப்பல் இன்று காலை திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் இறங்குதுறைக்கு வருகை தந்துள்ளது. மொரிசியஸ் நாட்டிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த குறித்த கப்பலானது இலங்கையின் பிரதான துறைமுகங்களாகிய காலி, கொளும்பு, அம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் தரித்து நின்றதுடன் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்தது. இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இது போன்ற ஒரு உல்லாசப் பயணிகள் கப்பல் நாட்டின் பிரதான துறைமுகங்களில் தரித்து நின்றது எனவும் இதுபோன்ற முயற்சிகள் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்யமுடியும் என ஹபட் கிளொயிட் லங்கா தனியார் கூட்டுத்தாபனத்தின் பிரதம முகாமையாளர் சதுரநிசங்க தெரிவித்தார். மேலும் குறித்த கப்பலானது இன்றைய தினம் இந்தியா நோக்கி பயணத்தை தொடரவிருப்பதாக கூறப்படுகின்றது.

ஷிராந்தி ராஜபக்ஷவிடம் இரண்டு மணி நேரம் விசாரணை-

shranthiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்க்ஷ பாரிய ஊழல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று சுமார் இரு மணி நேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளது.

வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான 55 இலட்சம் ரூபா பெறுமதி வீடொன்றை அப்போது தனது ஊடகச் செயலாளராக கடமையாற்றிய மிலிந்த ரத்நாயக்கவுக்கு 5 இலட்சம் ரூபாவுக்கு வழங்க பரிந்துரை

செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

சரணடைந்த இரு பிக்குகளும் விளக்கமறியலில் தடுத்து வைப்பு-

courts (1)அண்மையில் ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பொலிஸில் சரணடைந்த இரு பிக்குகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று சிஹல ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் எனக் கூறப்படும் மாகல்கந்தே சுதந்த மற்றும் படல்குபுரே அரியஷாந்த ஆகிய இரு துறவிகளே இவ்வாறு சரணடைந்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. எதுஎவ்வாறு இருப்பினும் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, மாகல்கந்தே சுதந்த தேரர் நீதிமன்றத்தை அவமதிக்கும் உள்நோக்கம் தான் உள்ளிட்ட குழுவினருக்கு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவலையடைவதாகவும், எனினும் சட்டத்தை மதித்தே பொலிஸில் சரணடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அறுவர் நாளை பொலிஸில் சரணடையவுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யோசித்தவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை-

yosithaநிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி, யோசித்தவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் படி, யோசித்த உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தீர்வுத் திட்டத்திற்கான வட மாகாண சபையின் குழுவினது முதலாவது கூட்டம்-

NPCவட மாகாண சபையினால் அரசியல் தீர்வுத் திட்டத்தினை தயாரிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட குழுவின் முதலாவது கூட்டம் இன்று நடைபெற்றது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற வட மாகாண சபை அமர்வில் அரசியல் தீர்வுத் திட்டத்தினை தயாரிப்பதற்கான 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் முதல் அமர்வு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரின் இணைத்தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.