Header image alt text

புளொட் தலைவர் பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன் லண்டனுக்கு விஜயம்-(படங்கள் இணைப்பு)

vxஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 29.01.2016 அன்று ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துரையாடல்களை நிறைவுசெய்து கொண்டு நேற்றுப்பகல் லண்டனுக்குச் சென்றுள்ளார்.

அவர் லண்டனைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து லண்டன் சிற்றி விமான நிலையத்தில் வைத்து கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை வரவேற்றுள்ளனர்.

இதேவேளை, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான நேரடி கலந்துரையாடல். நாளை (03.02.2016) புதன்கிழமை பி.ப 18:00 மணியளவில் லண்டன் EastHam Town Hall, 328 Barking Road, E6, 2RP என்ற முகவரியில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

கழகத்தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் அழைக்கப்படுகின்றீர்கள்.
தயவுகூர்ந்து தங்கள் வரவை உறுதிப்படுத்தவும்,

மேலதிக விபரங்களுக்கும்:
07985 156814, 07905 180636
“அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம்”
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
பிரித்தானியக் கிளை PLOTE-UK)

Read more

இலங்கையில் மீண்டும் நீராவி ரயில் சேவை-

neeravi railஇலங்கையின் ரயில் சேவை வரலாற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று நீராவி ரயில் கொழும்பிலிருந்து பதுளை வரை சென்றுள்ளது. இலங்கையில் ரயில் சேவை அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகின்றன. ரயில் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவி புகையிரதமாக இயங்கியது. இந்நிலையில் இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்கு பிறகு கொழும்பில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரை இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவதால் இன்று இச்சேவை நடைமுறைப்படுத்தப்பட்டதோடு பல சுற்றுலாப் பயணிகள் இந்த ரயிலில் பயணித்தனர். மேலும் அட்டன் புகையிரத நிலையத்தில் குறித்த புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்ட போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மேற்படி புகையிரதத்தை புகைப்படங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழில் தேசிய கீதம் பாட எடுத்த தீர்மானத்திற்கு உதய கம்மன்பில எதிர்ப்பு-

thesiyamஇலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் அரசியலமைப்புக்கு விரோதமானது என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரவும் முடியும் என, அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 7வது அத்தியாயத்தின் படி, இலங்கையின் தேசிய கீதம் “சிறீலங்கா மாதா..” எனவும் 1987ம் ஆண்டின் பின்னர் அது தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் தேசிய கீதம் பல மொழிகளில் பாடப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு எனவும், அவ்வாறானதொரு நிலை இலங்கையில் இல்லை எனவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பூர் சிறுவன் கொலை தொடர்பில் 15 வயது சிறுவன் கைது-

childதிருகோணமலை சம்பூர் 7ஆம் வட்டாரத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான சிறுவனே இன்று நண்பகல் ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மூதூர் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசாரணைக்குழுவினரால் சந்தேகநபரான உயிரிழந்த சிறுவனின் மைத்துனன் கைது செய்யப்பட்டுள்ளான். சந்தேகநபரான சிறுவனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரான சிறுவனை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பூர் 7 ஆம் வட்டாரம் பகுதியில் வசித்த குகதாஸ் தர்சன் கடந்த 25 ஆம் திகதி மாலை காணாமற்போன நிலையில் அன்று நள்ளிரவு குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து கல்லில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். 6 வயது சிறுவனான குகதாஸ் தர்சனின் மரணம் தொடர்பில் 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சாவகச்சேரியில் தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண் கைது-

goldயாழ். சாவகச்சேரி பகுதியில் 3,90,00,000 பெறுமதியான சட்டவிரோத தங்க பிஸ்கட்டுக்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் இன்று அதிகாலை 3.50 அளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான பெண்னொருவரே 7 கிலோகிராம் பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய விசேட பொலிஸ் பிரிவினூடாக சந்தேகநபரான பெண் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளுக்காக யாழ். தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேற்படி தங்க கட்டிகளை மாதகல் பகுதியில் இருந்து வேனில் எடுத்துச் செல்லும்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணிடம் விசாரணைகள் தொடர்வதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் ஐதேமு.வில் போட்டியிட ஐதேக முடிவு-

UNP (2)எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன்படி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே முன்னணியின் கீழ் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக, அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட, அக் கட்சியின் செயற்குழு எதிர்வரும் 8ம் திகதி கூடவுள்ளது. இதேவேளை, மறைந்த எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சியின் செயற்குழு தீர்மானிக்கவுள்ளதாகவும், பெரும்பாலும் சரத் பொன்சேகாவுக்கு இந்த வாய்ப்பு கிட்டலாம் எனவும் தெரியவருகின்றது.

எம்பிலிப்பிட்டிய உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது-

policeகுற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 29 வயதான இளம் குடும்பஸ்தர் பலியானார். குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் மாடியிலிருந்து தள்ளிவிட்ட காரணத்தாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தனது கணவனின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை காலம் தாழ்த்தாது உடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞனின் மனைவி, 10 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கதல் செய்துள்ளார்.

தெற்கு அதிவேக வீதி பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு-

high wayதெற்கு அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.

மஹரகமவில் இருந்து காலி மற்றும் மாத்தறை வரை தற்காலிக அடிப்படையில் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் ஊழியர்கள் போக்குவரத்தில் இருந்து விலகியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பஸ் சங்கங்கள் எழுப்பும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என தேசிய போக்குவரதது; ஆணைக்குழு தலைவர் எம்.ஏ.பீ.ஹேமசந்திர கூறியுள்ளார்.