யாழில் திருநெல்வேலி பஸ் விபத்தில் மூவர் படுகாயம்-
தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பயணித்த பாடசாலை மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலி பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த முச்சக்கர வண்டியை அருகிலிருந்த தனியார் வங்கி கட்டடத்துடன் மோதியுள்ளது. மேலும் இந்த விபத்தில் என்.டி.பி வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தனியார் பேருந்து சாரதியை கைது செய்தததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
புலிகளுடன் தொடர்பு விடயமாக ஜேர்மனியில் இலங்கையருக்கு தண்டனை-
புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவருக்கு 18 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. 53 வயதான ஜீ.யோகேந்திரன் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனிய பிரஜைக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கருதப்படுகின்றது. இந்நிலையில், 2007-2009ம் ஆண்டு காலப் பகுதியில் யோகேந்திரன் புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுக்காக குறித்த நபர் 81000 யூரோக்களை திரட்டியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. புலிகளின் சார்பில் பணம் திரட்டியதாகவும் அவற்றை புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் யோகேந்திரன் விசாரணைகளின்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் உடன்படிக்கை-
ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல். சரத் பொன்சேக்காவிற்கும் இடையிலேயே இந்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது தொடர்பிலேயே மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதேவேளை இதனடிப்படையில், மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அத்துடன், முக்கிய அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு கடவை அமைத்து தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்-
கிளிநொச்சி உதயநகர் துர்க்கை அம்மன் வீதியை மக்கள் பயன்பாட்டிற்கேற்ப பாதுகாப்பு கடவையாக அமைத்து தருமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வீதியினை கிளிநொச்சி வைத்தியசாலை, கல்வி திணைக்களம், பாடசாலைகள், மற்றும் பேருந்து சேவைகளிற்காக நாளாந்தம் பெருமளவான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பான கடவையற்ற குறித்த வீதியை மூடுவதற்கு இன்று புகையிரத திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச மக்கள் வீதியின் இரு மருங்கிலும் தடைகளை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பொலிஸ் அதிகாரி, மற்றும் புகையிரத பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் குறித்த வீதியை அப்புறபடுத்துவதை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் உயர் மட்டத்திற்கு எடுத்து சென்று தீர்வினை பெற்றுத் தருவதாகவும், புகையிரத பாதுகாப்பு அதிகாரி மக்களிடம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்-
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆஜராகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி கொடுக்கல் வாங்கல் குறித்து முன்னாள் அமைச்சரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.
இன்று முற்பகல் 10 மணியளவில் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பசிலிடம் தற்போது வாக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
35 பேர் கொண்ட வெளிநாட்டு தூதுவர்கள் குழு யாழ். விஜயம்-
இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் வெளிநாட்டு தூதுவர்கள் 35பேர் கொண்ட குழுவினர் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர். விஜயம் மேற்கொண்ட தூதுவர் குழுவினர் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் போருக்கு பின்னான நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர் இலங்கை நாட்டில் தூதுவராலயங்கள் இல்லாத நாடுகளின் தூதுவர்கள் குறிப்பாக இந்தியாவில் உள்ள தூதுவர்களே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் வடமாகாண ஆளுனரின் ஒழுங்கமைப்பில் வடபகுதிக்கான விஜயத்தை இன்று மேற்கொண்டிருந்தனர். இதன்போது வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் பிரதம செயலாளர் ஆகியோரை சந்தித்து வடபகுதியின் நிலைமைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான அவதானங்களை மேற்கொண்டனர். இந்த சந்திப்பு இன்றைய தினம் பிற்பகல் 1 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.
புகலிடக் கோரிக்கையாளரை முகாம்களில் தடுத்துவைப்பது சட்டரீதியானது-
புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை சட்டரீதியானது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்துவைப்பது சட்டவிரோதமானது எனக்கூறி பெண்ணொருவர் தொடுத்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து 37 குழந்கைகள் உட்பட 250பேர் நவ்றுவிலுள்ள முகாமிற்கு அனுப்பப்படும் ஆபத்து உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியா கொன்சவேர்ட்டிவ் அரசாங்கத்திற்கும் புகலிடக் கொள்கையாளர்கள் குறித்த அதன் கடும் கொள்கைகளிற்கும் கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்றவேளை கைதுசெய்யப்பட்டு நவ்றுவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பங்களாதேஸ் பெண்மணியொருவரே இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். பின்னர் அவர் கர்ப்பிணி என தெரியவந்ததை தொடர்ந்து அவுஸ்திரேலிய மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டவேளை அங்கு பிரசவித்திருந்தார்.