யாழ் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆஜர்-

jaffna courtsகடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி காணாமல்போன, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் தொடர்பிலான வழக்கு இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இன்றைய வழக்கு விசாரணையின் போது தொடர்பாடல், மற்றும் மொழி பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக வழக்கு விசாரணை எதிர்வரும் மே 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காணாமல் போன லலித் மற்றும் குகன் ஆகியோர் அரச பாதுகாப்பில் இருப்பதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்னதாக கூறியிருந்தார். இது குறித்து சாட்சியமளிப்பதற்காகவே அவருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரை யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும் கெஹலிய நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. இந்நிலையிலேயே கெஹெலிய இன்று யாழ் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இன்றைய வழக்கு விசாரணை நிறைவுபெற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கெஹெலிய, யாழ். நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்க வேண்டி வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே சாட்சியமளிக்க நீதிமன்றிற்கு ஆஜராகியிருந்தேன். மனித உரிமை செயற்பாட்டாளர்கள் காணாமல் போன சம்பவம் பற்றி தெரியும். தற்போது நீதிமன்றில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் கருத்து சொல்ல முடியாது. அதனை விரும்பவும் இல்லை. வழக்கு முடிந்த பின் வந்தால், முழு விடயத்தையும் கூறுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.