சுதந்திர தினத்தை முன்னிட்டு 606 கைதிகளுக்கு பொது மன்னிப்பு-

prisonersசுதந்திர தினத்தை முன்னிட்டு 606 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களுல் 13 பெண் கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஸார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார். சிறு குற்றமிழைத்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுபவர்களில் அதிகமானவர்கள் மாத்தறை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 67 கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். மேலும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து 14பேர் விடுதலை செய்யப்பட்டனர். களுத்துறை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் இருந்து 59பேர் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள், அபராதம் செலுத்த முடியாதவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அதில் 593 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கே.பி வழக்குக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெற அறிவுறுத்தல்-

KPபுலிகள் அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர்களுள் ஒருவரான குமரன் பத்மநாதன் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இவ் அறிவுறுத்தல் அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டது. இவ் வழக்குக்கு இந்தியப் பொலிசாரின் உதவி அவசியமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்த வேண்டுகோள் தமது தரப்பால் முன்வைக்கப்பட்டது என ஜேவிபியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் குமரன் பத்மநாதனை கைதுசெய்யுமாறு இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்தியக் காவல்துறையின் ஒத்துழைப்பை பெற்று வழக்கை விரைவாக முன்னெடுக்குமாறு மனுதாரர் சார்பில் கோரப்பட்டது. கேபி புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்த விசாரணைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதென அரசதரப்பு நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

காணாமல் போனோரை தேடித் தருமாறு வலியுறுத்தி போராட்டங்கள்-

mssingஇலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று காணமால் போனவர்களின் குடும்ப உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். காணாமல் போனோரை தேடித் தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் இன்றும் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று காலை முதல் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடித்தருமாறும், தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இதன்படி கறுப்பு நிற துணிகளால் தமது வாய்களை அடைத்தவாறு வவுனியா நகர சபைக்கு முன்னாள் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். போரின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை எங்கே என்று எழுதப்பாட்ட பதாகைகளை இவர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கவும் இவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மேலும், முல்லைத்தீவில் காணமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காலை 10மணியளவில் முல்லைத்தீவு கச்சேரிக்கு அருகிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் ஒன்று கூடிய உறவினர்கள் அவ்விடத்திலிருந்து கச்சேரிவரை ஊர்வலமாக சென்று கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணமால் போன குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.