ஐ.நா ஆணையாளரின் யாழ் விஜயமும் சந்திப்புகளும்-(படங்கள் இணைப்பு)
இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹ_சைன் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இதன்பொது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை இன்றுகாலை 10மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரன், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் நின்றிருந்த நிலையில் அவர்களையும் ஆணையாளர் சந்தித்துள்ளார். இதேவேளை தமது ஐ.நா ஆணையாளருடனான சந்திப்பு குறித்து வடமாகாண முதலமைச்சர் கருத்துக் கூறுகையில், அரசியல் கைதிகள் விடயத்தில் பொதுமன்னிப்பை விட அவர்களின் வழக்கு விசாரணை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படுதல் தான் சரியானதாக அமையும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார். சிறையில் வாடும் இளைஞர்கள் விடயம் தொடர்பில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை விட அவர்களின் வழக்கு விசாரணைகளை சரியாகவும், துரிதமாகவும் முன்னெடுத்து அவர்களை விடுதலை செய்வது சரியானதாக அமையும். அரசுக்கு அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களைக் கூறி கைதிகள் விடுதலை தொடர்பில் செயற்படுமாறு நான் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். ஆணையாளரின் வருகையானது சிறையில் வாடும் இளைஞர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறன ஒரு மனித உரிமைகள் ஆணையாளர் பாதிக்கபட்ட தமிழர் தாயகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மக்களின் நிலமைகள் தொடர்பில் அறிவது எமக்கு நெகிழ்சி அழிக்கிறது என்று தெரிவித்தார். மேலும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சுன்னாகம் நலன்புரி நிலையங்களிற்கு சென்று அங்குள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் அவர் உள்ளிட்ட குழுவினர் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் சமய வழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.