வெளிநாட்டு விசாரணை அவசியமில்லையென தேரர்கள் கோரிக்கை-

ddfdfdfஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை அவசியமில்லை என்று அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பீடங்களின் மாநாயக்க தேரர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹ{சைனிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா அத் அல் ஹ_சைன் இன்று முற்பகல் கண்டிக்கு விஜயம் செய்திருந்தார். கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவரை பஸ்நாயக்க நிலமே வரவேற்றார். பின்னர் இருவருக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்கர்களை சந்தித்து மனித உரிமைகள் ஆணையாளர் ஆசீகளைப் பெற்றுக்கொண்டார். தனது இலங்கைப் பயணத்தின் நோக்கம் குறித்தும் இதன்போது அவர் விவரித்தார்.

இராணுவத்தினரை பாதுகாக்கும் வேலைத்திட்டம், முதலில் மகிந்த கையெழுத்து-

ddfdfஇராணுவ வீரர்களை பாதுகாப்பதற்கு பத்து இலட்சம் கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் இன்றையதினம் கொழும்பு சம்புத்தாலோக விஹாரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கையெழுத்தினை முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இட்டுள்ளார்.

இதன்போது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலரும் உடனிருந்ததாக கூறப்படுகின்றது. இதன்படி சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம். படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்களைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ச மகஜரில் கையொப்பமிட்டுள்ளார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் ஆரம்பமாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வித்தியா கொலை வழக்கு சந்தேகநபரை சிறை மாற்றுவதற்கு மறுப்பு-

tyyyபுங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களில் ஒருவரான பத்தாவது சந்தேகநபரை யாழ் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, இன்று பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இன்றைய விசாரணையின் போது குற்றப்புலனாய்வு பிரிவினரால் மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்காமையால் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேஷன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவி துஷ்பிரயோகம், ஆசிரியருக்கு பிணை வழங்ககூடாதென ஆர்ப்பாட்டம்-

ewrereமட்டக்களப்பு, கருவாங்கேணி பகுதியில் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவருக்கு பிணை வழங்கக் கூடாது என வலியுறுத்தி இன்று முற்பகல் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான ஆசிரியர் மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்ற நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சந்தேகநபருக்கு விடுதலை வழங்க கூடாது எனவும் அவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பட்டிருந்தனர்.