ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு-

maithri UNநான்கு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராஅத் அல் ஹ_சைன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின்போது, சட்ட ஓழுங்கு பாதுகாப்பு, இலங்கையின் சமகால சவால்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்பவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்த் ராத் அல் ஹ_சைன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் செய்த் ராத் அல் ஹ_சைன் இன்று இரவு நாடு திரும்பவுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு-

fdfdதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹ_சைனுக்குமிலான சந்திப்பொன்று இன்றுகாலை கொழும்பில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சந்திப்பு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் கூறுகையில், திருப்திகரமான ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம் மற்றும் நாட்டிலுள்ள தேசிய பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்களைப் பற்றியும் நாங்கள் பேசியிருக்கின்றோம், காணிகள் சம்பந்தமாகவும், அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாகவும், காணாமற்போனோர் சம்பந்தமாகவும் அதேநேரத்தில் உண்மையான நல்லிணக்கம் விசுவாசமாக ஏற்படுவதாக இருந்தால், ஒரு நிரந்தரமான நியாயமாக அரசியல் தீர்வுக்கான அவசியத்தையும் நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம். மிகவும் திருப்திகரமான சந்திப்பு என்று நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று கூறினார்.

அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் 39ஆவது சிரார்த்த தினம்-

sfdfdfffffசட்ட மேதையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் 39ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் மலர்மாலை அணிவித்ததுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஆதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறில் மற்றும் ஏனைய உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் மலர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்-

fosekaபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்த்தனவின் ஆசனத்துக்கே பொன்சேகா தெரிவாகியுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டதன் மூலம் அரசியலில் பிரவேசித்தார். அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அவர், பின்னர் ஜனநாயகக் கட்சியை உருவாக்கினார். மேலும் கடந்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தனது ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரால் வெற்றிபெற முடியவில்லை. பின்னர், அண்மையில் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை பொன்சேகாவுக்கு வழங்க ஏகமனதாக தீர்மானித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.