Header image alt text

தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-(படங்கள் இணைப்பு)

IMG_4582வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று முன்தினம் (08.02.2016) அதிபர் திருமதி எம்.எ.மோகன் அவர்களது தலைமையில் வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு எம்.என்.யு.என்.சுபசிங்க, மேக்சன் வங்கி முகாமையாளர் திரு ஆர்.சரவணன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு ல.யூட் பரதமாறன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். இவ் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான அனுசரனையை லண்டனில் வசிக்கும் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் வழங்கியிருந்தார். Read more

சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயன்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரை-

jayanthaபுதிய சட்ட மா அதிபராக முன்னாள் சிரேஷ்ட சொலிசிஸ்டர் ஜெனரல் ஜயன்த ஜயசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை பரிந்துரை செய்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய சட்ட மா அதிபரை நியமிப்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்கு அரசியலமைப்பு பேரவை இன்றுமாலை கூடியிருந்தது. இந்த கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டவியல் படிப்பை நிறைவு செய்தநிலையில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 1983ம் ஆண்டில் இணைந்து கொண்ட ஜயன்த ஜயசூரிய 29ஆவது சட்ட மா அதிபராக பதவி ஏற்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 32 ஆண்டுகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய ஜயன்த ஜயசூரிய தற்போதுவரை சிரேஷ்ட மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரலாக பதவி வகித்து வருகின்றார். முன்னதாக கடமைநேர சட்ட மா அதிபராக சுகந்த கம்லத் நியமிக்கப்பட்டிருந்தார்

பொதுபலசேனா செயலர் ஞானசார தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

gnanasaraபொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளை, சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக, ஞானசார தேரர் மீது குற்றம்சுமத்தப்பட்டது. அவர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக, சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, தேரரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று ஹோமாகம நீதிமன்றம் பிணை வழங்கியது. எதுஎவ்வாறு இருப்பினும் சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரை இன்றுவரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு மரண அச்சுறுத்தல் விடுப்பு-

karuநேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தம்மை பாராளுமன்றத்தில் சுதந்திரமான அணியாக செயற்பட அனுமதிக்குமாறு கோரி, நேற்று பாராளுமன்றத்தினுள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். இந்தப் பிரச்சினையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுள் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு, சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர்களது ஆர்ப்பாட்டத்தை பொருட்படுத்தாது சபை நடவடிக்கைகளை முறையே கொண்டு செல்லவும் அவர் தீர்மானித்தார். இந்நிலையில் நேற்று இரவு, தொலைபேசி ஊடாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு இடமளிக்க வேண்டும் என, யாரோ மிரட்டல் விடுத்ததாக, கரு ஜெயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எனினும் தான் அதனை பொருட்படுத்தப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிணை வழங்கப்பட்டிருந்த 14 தமிழ்க் கைதிகள் நீதிமன்றில் ஆஜர்-

courtsபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்த 14 தமிழ்க் கைதிகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டுமென சட்ட மாஅதிபர் திணைக்களம் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த நிலையில், அது தொடர்பான முடிவை தெரிவிப்பதற்காக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

தாம் புனர்வாழ்வை எதிர்ப்பார்க்கவில்லை எனவும், முழுமையான விடுதலையே தமக்கு வேண்டுமெனவும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 14 பேரும் தங்களின் சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி ஜூன் மாதம் முதலாவம் திகதி வரை இது குறித்த விசாரணைகளை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அமெரிக்கா இலங்கைக்கு 31 மில்லியன் டொலர் ஒதுக்கும்-

Fஇலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளிற்காக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை (210.49 கோடி ரூபா) ஒதுக்கும் யோசனையை அமெரிக்க அரசாங்கம் முன்வைத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்கிரசிற்கு அனுப்பி வைத்துள்ள வரவுசெலவுத் திட்ட யோசனையிலேயே இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களிற்கு பின் இலங்கைக்கான அமெரிக்க உதவி புதிய யுகத்தில் நுழைந்துள்ளதாக ஜோன் கெரியின் வரவுசெலவுத் திட்ட யோசனை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பங்களிப்புடன் விசாரணை வேண்டும்-சரத் பொன்சேகா எம்.பி-

fosekaசர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடனேயே போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக நேற்றைய தினம் பதவியேற்ற சரத் பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதை வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களினது பங்களிப்பும், ஆலோசனைகளும் அவசியானது. இராணுவத்தினருக்கு எதிராக தற்போது பல குற்றச்சாட்டுக்களும், சந்தேகங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணைகள் அவசியம். எனவே, இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினருக்குக் கட்டளை பிறப்பித்தவன் என்ற வகையில் அந்த இராணுவத்தினரை குறித்த குற்றச்சாட்டக்களில் இருந்து மட்டுமல்லாது அவர்களுடைய கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. Read more