சர்வதேச பங்களிப்புடன் விசாரணை வேண்டும்-சரத் பொன்சேகா எம்.பி-

fosekaசர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடனேயே போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக நேற்றைய தினம் பதவியேற்ற சரத் பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதை வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களினது பங்களிப்பும், ஆலோசனைகளும் அவசியானது. இராணுவத்தினருக்கு எதிராக தற்போது பல குற்றச்சாட்டுக்களும், சந்தேகங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணைகள் அவசியம். எனவே, இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினருக்குக் கட்டளை பிறப்பித்தவன் என்ற வகையில் அந்த இராணுவத்தினரை குறித்த குற்றச்சாட்டக்களில் இருந்து மட்டுமல்லாது அவர்களுடைய கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே, போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது சர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடனும், ஆலோசனைகளுடனும் நடைபெற்றாலே அது நம்பகத்தன்மை வாய்ந்தாக அமையும். இதுவே எனது நிலைப்பாடு. தற்போதுள்ள புதிய அரசின் நல்லாட்சியை சீர்குலைப்பதற்கு ஒரு குழு முயற்சித்து வருகின்றது. அந்த சதி முயற்சிகளை தோற்கடித்து நல்லாட்சியைப் பாதுகாப்பதற்கு முழுப் பங்களிப்புடன் செயற்படுவேன். எனக்கு விரைவில் அமைச்சுப் பதவி வழங்கவுள்ளதாக ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்திருக்கின்றார்கள். அது கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். மேலும் கடந்த 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி என்னை சிறையிலே அடைத்தார்கள். அதேமாதம் அதே திகதியில் எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிபார்சு செய்த தகவல் வெளிவந்துள்ளது என்று குறிப்பிட்டார்.