பொன்சேகாவின் நியமனம் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி-
சரத் பொன்சேகாவின் படைகள் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவரை இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமை, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு நேர்மறையானது என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. சரத் பொன்சேகாவின் இந்த நியமனமானது பரந்தளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களை அரசாங்கம் பாதுகாக்கலாம் என்கின்ற சமிஞ்சையையே வெளிப்படுத்துவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர், பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புக் கூறல் தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கைகளை அன்றி, தீவிரமான செயற்பாடுகளை முன்னெடுத்து, இலங்கை மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும், அர்த்தமுள்ள வகையில் இலங்கை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் என்று அரசாங்கத்தின் மீது, பாதிக்கப்பட்டவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் வகையில் பொன்சேகாவின் இந்த நியமனம் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எல்லா இலங்கையர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய இந்தத் தருணத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொறுப்புக் கூறல் விடயத்தில் கவலையளிக்கும் வகையிலான சமிஞ்சையை வெளிப்படுத்தியுள்ளதாக பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சட்ட மாஅதிபராக ஜெனரல் ஜயந்த ஜயசூரிய பதவிப்பிரமாணம்-
புதிய சட்ட மாஅதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இன்றுகாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். சட்ட மாஅதிபர் நியமனத்திற்கு மூவரது பெயர்கள் ஜனாதிபதியால் அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து, அவர்களில் ஜயந்த ஜயசூரியவை புதிய சட்ட மாஅதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான சுஹத கம்லத், ஜயந்த ஜயசூரிய மற்றும் கபில வைத்தியரத்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. குருநாகல் மலியதேவ கல்லூரியின் பழைய மாணவரான ஜயந்த ஜயசூரிய, 1979ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்குள் பிரவேசித்து, 1981ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார். 1983 ஆம் ஆண்டு சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து, 2011ஆம் ஆண்டு மேலதிக சொலிஸிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அங்குலானை பொலிஸ் வழக்கு மற்றும் சதீப லக் ஷான் வழக்கு போன்றவற்றின் அரச சட்டத்தரணியாக இவர் ஆஜராகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட விசாரணை-
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட சாட்சி விசாரணைகளை யாழ் குடாநாட்டில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச குறிப்பிட்டுள்ளார். கோப்பாய், வலி வடக்கு மற்றும் தெற்கு, சாவகச்சேரி, காரைநகர் மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும், யாழ் குடாநாட்டில் கடந்த அமர்வில் கலந்துக் கொள்ளாத மதுரங்கேனி பிரதேச மக்களுக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள அமர்வில் கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார். குறிப்பாக யாழ் குடாநாட்டிலிருந்து கிடைத்துள்ள 12,000 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிப்பது குறித்து ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதன் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கம்-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த மூன்று விமானங்கள், மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு திசைதிருப்பப்பட்டு, அங்கு தரையிறக்கப்பட்டுள்ளன.
துபாய், கட்டார் மற்றும் பீஜிங் ஆகிய விமான நிலையங்களிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த விமானங்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த 3 விமானங்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்ததாகவும், விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை, கட்டுநாயக்க பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாகவே, விமானங்கள் மத்தலைக்கு திசைதிருப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியாவுக்கு இலங்கை கண்டனம்-
வடகொரிய கடந்த ஞாயிற்றுக்கிழமை நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையை பரிசோதித்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என வடகொரியாவை கேட்டுக்கொள்வதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடகொரியா கடந்த 7ம் திகதி உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நெடுந்தூரம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
யோசித்த ராஜபக்ச உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோசித்த ராஜபக்ஷ, நிஷாந்த ரணதுங்க, ரோஹன வெலிவிட்ட உள்ளிட்ட ஐவர் அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களை, மீண்டும் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை
எதிர்வரும் 25ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சிசிலியா கொத்தலாவலவுக்கான விளக்கமறியல் நீடிப்பு-
பினாஸ் அன்ட் கிரடிட் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டார்களின் நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவலவுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று வியாழக்கிழமை பிறப்பித்தார். அவர், இந்த வழக்கின் 8 ஆவது சந்தேகநபராவார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.