நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சர்வதேச ரீதியாக வரவேற்பு-

mangalaஇலங்கை நாட்டின் மீதுள்ள பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கம் என்பது தற்போது சர்வதேச நாடுகளுக்கிடையில் வரவேற்கதக்கதாக அமைந்துள்ளது என வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எமது நாட்டின் தலைமைத்துவத்தினை எற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தூர நோக்கத்தின் அடிப்படையில் பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பல நாடுகளிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதன் ஊடாக மக்களுக்கான சிறந்த பணிகளை முன்னெடுப்பதற்கு வழி வகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட்டுள்ளது. இவ்வாண்டு தேசிய கீதம் தழிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்பட்ட விடயம் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துக்காட்டக அமைந்துள்ளது என்றார். இலங்கை மக்களின் நல்லிணக்கப் பொறிமுறை செயற்பாடுகளுக்கு மக்களிடம் இருந்து ஆலோசனை பெறுவதற்கான இணையத்தள அங்குராப்பண நிகழ்வு நேற்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பங்களிப்பினை முழுமையாக நிராகரிக்க முடியாது-பிரதமர்-

ranilபோர்க்குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்பினை முழுமையாக நிராகரிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உள்ளக நீதிமன்றக் கட்டமைப்பிடமே ஒப்படைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். குருவாயூரில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இந்தியா சென்றிருந்த நிலையில் அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க மனித உரிமை அமைப்புக்கள் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளின்போது பங்குபெறலாம். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் உயிரிழப்புக்களுக்கு பொறுப்பான படையினர் மற்றும் புலிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும். யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் யாரால் கொல்லப்பட்டார்கள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்பது பற்றிய துல்லியமான விபரங்களை அறிந்து கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது. இந்த விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். உயிரிழப்புக்களுக்கு யார் காரணம், அவர்களுக்கான தண்டனை நிர்ணயம் என்பன குறித்த இறுதித் தீர்மானம் உள்ளக நீதிமன்றப் பொறிமுறைமையின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

இந்திய பொலிஸ் குழு இலங்கை வருகின்றது-

kidneyசிறுநீரக கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இலங்கை வைத்தியர்கள் தொடர்பாக அடையாளம் காண்பதற்கு இந்தியாவின் ஹைதரபாத் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் சம்பவம் தொடர்பில் அண்மையில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

குறித்த கடத்தல் சம்பவத்துடன் இலங்கை வைத்தியர்கள் குழுவொன்று நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அந்த செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தன. குறித்த வைத்தியர்கள் தொடர்பில் உண்மைகளை அறிந்து கொள்வதற்காகவே இந்திய பொலிஸ் குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுநீரக கடத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை சுகாதாரப் பிரிவு விஷேட விசாரணை ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் அந்த அறிக்கை தற்போது சுகாதார அமைச்சரிடம் கையளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு விடயத்திலும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை-அல் ஹ_சைன்-

Zeid Raad al-Husseinஇறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ள வேண்டிய விசாரணை நடவடிக்கைகளில் எந்தவொரு விடயத்தையும் வற்புறுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் அல் ஹ_ஸைன் கூறியுள்ளார்.

சர்வதேச நீதிபதிகளை விசாரணை நடவடிக்கையில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ரொய்ட்டர் செய்தி சேவையுடன் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எனினும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடைமுறையும் பக்கச்சார்பற்ற முறையில் சுயாதீனமானதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அந்த நடவடிக்கைள் அனைத்தும் மிகவும் விரிவான செயல்முறையாக இருக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சமூக சேவையாளர்கள் 500 பேருக்கு சமாதான நீதவான் பதவி-

governmentநாட்டில் சமூக சேவைக்கு ஆர்வம் காட்டுகின்ற சமூக சேவையாளர்கள் 500 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி புத்தசாசன அமைச்சில் இந்த பதவி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய நியமனங்களை பெற்றுக்கொள்ள உள்ளவர்கள், நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

சமூகத் தலைவர்களின் சேவைகளைக் கருத்திற்கொண்டு பிரதேச நீதிமன்ற அதிகாரப் பிரிவு, மாவட்டம் மற்றும் அகில இலங்கை என்ற ரீதியில் சமாதான நீதவான் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் கிடப்பில்-

postவிநியோகிப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ள சுமார் 150,000 கடிதங்கள் மத்திய தபால் பரிமாற்றத்தில் தேங்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றுள் சுமார் ஒரு இலட்சம் சாதாரண கடிதங்களும் காணப்படுவதாக முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டார். சுமார் 50,000 வெளிநாட்டுக் கடிதங்களும் மத்திய தபால் பரிமாற்றத்தில் தேங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த கடிதங்களை விரைவில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான ஊழியர்கள் மத்திய தபால் பரிமாற்றத்தில் இல்லையென ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் கூறினார். மத்திய தபால் பரிமாற்றத்திற்கு நாளாந்தம் சுமார் இரண்டு இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் வரையான பதிவுத் தபால்கள் வந்துசேர்வதாகவும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ், மத்திய தபால் பரிமாற்றத்தில் இரண்டாம் நிலை தபால் உத்தியோகத்தர்கள் 155 பேருக்கான வெற்றிடம் நிலவுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார சுட்டிக்காட்டினார். இந்த விடயம் குறித்து தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன கூறுகையில், மத்திய தபால் பரிமாற்றத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதால் மற்றும் ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான செயற்பாடுகள் குறித்து தபால் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடப்பட்டதாக கூறினார். எவ்வாறாயினும், மத்திய தபால் பரிமாற்றத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் புதன்கிழமைக்குள் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.