வட மாகாண புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவிப்பிரமாணம்-
வட மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நாளை மறுதினம் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆங்கில ஆசிரியரான ரெஜினோல்ட் குரே 1988ஆம் ஆண்டு மேல் மாகாண சபை உறுப்பினராக அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். மேல் மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ள அவர் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திற்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் பதவிகளை வகித்திருந்த ரெஜினோல்ட் குரே சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராவார். வடமாகாண ஆளுநராகவிருந்த எச்.எம்.ஜி.எஸ். பளிஹக்கார, ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியதையடுத்து, ரெஜினோல்ட் குரே ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பண்டாரவளை விபத்தில் மாணவிகள் உட்பட 27 பேர் காயம்-
பண்டாரவளை ஒத்தக்கடை ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர். சம்பரகமுவ பல்கலைகழகத்தில் வெளிவாரி ஆங்கில பாடப் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் பயணித்த பஸ் ஒன்றுடன் கொள்கலன் மோதி இன்றுகாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 25 மாணவிகள் காயமடைந்துள்ளதுடன் கொள்கலன் ஓட்டுனரும் பஸ்ஸின் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த மாணவிகளில் இருவரின் நிலை சற்று கவலைக்கிடமாக காணப்பட்ட நிலையில் குறித்த இரண்டு மாணவிகளையும் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள், பண்டாரவளை, தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்சி மாற்றத்தினால் தமிழர் வாழ்க்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது-சுரேஸ்-
ஆட்சி மாற்றத்தின் பின்னர், வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலைமை மேலும் விருத்தி செய்யப்பட வேண்டும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் மக்கள் வாழ்ந்த விதத்திலும் பார்க்க, தற்போது வாழ்க்கைச் சூழல் இலகுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சொந்தமான காணித் தொகுதிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்நிலைமை இன்னும் விருத்தி செய்யப்படுவதுடன், பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவும், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.