யாழ். நீதிமன்றம்மீதான தாக்குதல் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களுக்கு பிடியாணை-

jaffna courtsயாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்களுக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கே யாழ். நீதவான் சின்னதுறை சதீஸ்தரன் இன்று இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 72 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். எனினும் 65, 66 மற்றும் 67ஆம் இலக்க சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. இன்றைய விசாரணைகளை அடுத்து குறித்த 3 சந்தேகநபர்களுக்கும் பிடியாணை பிற்ப்பிக்கப்பட்டதுடன் அடுத்த விசாரணையின்போது அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதவான் சின்னதுறை சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பான கருத்துக்களை பெறும் நடவடிக்கை-

sfdfdபுதிய அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிய நியமிக்கப்பட்ட குழு இன்று யாழில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா, எஸ்.விஜேசந்திரன், கொழும்பு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் என். செல்வகுமாரன் மற்றும் குமுது குசும் குமார, ஹரினி அமரசூரிய, உபிள் அபேரத்ன, சுனில் ஜெயரட்ன உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய் மொழி மற்றும் எழுத்து மூல யோசனைகளைப் பெற்றுக்கொண்டனர். இந்த அமர்வில், பத்மநாபா ஈபிஆர்எல்எப் கட்சியின் பிரதிநிதி தி.சிறிதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட முன்னாள் அரச உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை கூறிவருகின்றனர். நாளையும் குறித்த செயலமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விசுவமடு விபத்தில் பெண் ஸ்தலத்தில் உயிரிழப்பு-

accidentமுல்லைத்தீவு விஸ்வமடு 12ஆம் கட்டைப் பகுதியில் மோட்டர் வாகனமும் மகேந்திரா கெப் ரக வாகனமும் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது உயிரிழந்தவர் 25 வயதான சிவில் பாதுகாப்பு பிரிவு முன்பள்ளி ஆசிரியர் சிவபாலன் கஸ்தூரி எனவும், இன்று சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியரியர்களுக்கான கலந்துரையாடலை முடித்துக் கொண்டு கிளிநொச்சி சென்று கொண்டிருந்த வேளை 12 ஆம் கட்டை பகுதியில் வைத்து வெள்ளை நிற மகேந்திர கெப் ஒன்றுடன் விபத்துக்குள்ளானதாகவும் விபத்துக்குள்ளான மகேந்திரா வாகனம் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்பு வலய சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ச-

yosithaசி.எஸ்.என். தொலைக்காட்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விசேட வலயமாக்கப்பட்டுள்ளது.

யோசித உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.என்.சீ.தனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சிறைப்பகுதிக்கு அருகில் உள்ள சிறையில் இருந்து கையடக்கத் தொலைப்பேசி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதுவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிலையில் பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யோசித உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமலையில் கைக்குண்டு வீச்சு, சந்தேகத்தின்பேரில் இருவர் கைது-

arrest (30)திருகோணமலை உப்புவெளி நான்காம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றின்மீது கைக்குண்டு வீசப்பட்டமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 40 மற்றும் 44 வயதுடைய இருவர் எனவும் இன்று இவர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. முச்சக்கரவண்டி சாரதி ஒருவருடைய வீட்டின்மீது நேற்று இரவு சுமார் 9.30அளவில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. இவ்வாறு வீசப்பட்ட கைக்குண்டு வீட்டில் பட்டு வெடித்துள்ளது.

இதன்போது உயிராபத்து எதுவும் ஏற்படவில்லையென்பதுடன், வீட்டுக்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அசம்பாவிதத்துக்கு தனிப்பட்ட பிரச்சினை காரணமென விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.