ஜனாதிபதிக்கும் ஜேர்மன் உயரதிகாரிகளுக்குமிடையே விசேட கலந்துரையாடல்-

fdgfgமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனி சென்றடைந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை பேர்லின் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டுள்ளார். விமானநிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியையும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேனவையும் ஜேர்மனி அரசாங்கத்தின் பிரதம மரபுச் சீர்முறை அலுவலர் ஜெர்கன் கிரிஸ்டியன் மேர்டன்ஸ், ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக அமுனுகம உள்ளிட்ட இலங்கைத் தூதரக அலுவலர்கள் வரவேற்றனர். ஜேர்மனியில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜேர்மன் அதிபர் அன்ஜலா மேர்கல், சபாநாயகர் பேராசிரியர் நோபட் ஜெமன்ட் மற்றும் ஜேர்மனியின் சமஷ்டித் தலைவர் ஜோகிம் கோர்க் ஆகியோர் உள்ளிட்ட ஜேர்மனியின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜேர்மனிக்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தக, கலாசார உறவுகளைப் பலப்படுத்துவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இதன்மூலம் ஜேர்மனியுடனான இலங்கையின் வர்த்தக உறவுகள் பெரிதும் முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுதினம் ஜனாதிபதி கைத்தொழிற்துறைக்கான ஜெர்மன் வர்த்தகப் பேரவையில் உரையாற்றவுள்ளார். இதேவேளை ஜேர்மனிக்கான தனது மூன்று நாள் விஜயத்தை பூர்த்தி செய்யும் ஜனாதிபதி 19ம் திகதி ஒஸ்ரியா நோக்கி பயணமாகவுள்ளார். ஒஸ்ரியாவுக்கான தனது இரண்டுநாள் விஜயத்தின்போது ஒஸ்ரிய ஜனாதிபதி ஹெயின்ஸ் பிஸ்கர் உள்ளிட்ட அந்நாட்டு முக்கிய பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.