அரசியல் கைதிகள், காணாமல் போனோர் விடயத்தில் நிலையான தீர்வு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒரு விவாத பிரேரணையாக இல்லாமல் நிலையான தீர்வு காண்பதற்குரிய பிரேரணையாக இருக்க வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனோர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். எதிர்வரும் 23ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு வலியுறுத்தி முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கவுள்ள இந்த பிரேரணை நிலையான ஒரு தீர்வினை எட்டக்கூடியதாக இருக்க வேண்டும். உண்மையான நல்லிணக்கம் மற்றும் இதய சுத்தியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் செயற்படுகின்றார்கள் எனின், மனிதாபிமானத்துடன், அரசியல் கைதிகளும் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவே, எதிர்வரும் 23 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு பிரேரணை தனி விவாதமாக இருக்காமல், அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் சரியான தீர்வினை எடுக்க கூடியதாக இருக்க வேண்டுமென்றும், அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டுமென்றும் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.