இலங்கை மற்றும் ஜேர்மனுக்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து-

sri lanka Germanyஜேர்மனுக்கு விஜயம் செய்து மூன்றாவது நாளான இன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டு சான்சிலர், ஜனாதிபதி மற்றும் சபாநாயகருடன் கலந்துரையாடவுள்ளார். மேலும், இன்று இரு நாடுகளுக்குமிடையில் சில ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக, ஜேர்மனியின் பர்லின் நகரிலுள்ள எமது விஷேட பிரதிநிதி ஷேகான் பரணகம தெரிவித்துள்ளார். அத்துடன், மாலை ஜேர்மன் சான்சிலருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதன்போது சான்சிலர் விஷேட உரையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஊடகவியலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த நாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதே தனது ஜேர்மன் விஜயத்தின் நோக்கம் என, இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கின்றார்.

மின்சார சபையின் மனிதவலு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது-

arpaatamஇலங்கை மின்சார சபையின் மனித வலு ஊழியர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இவர்களது ஆர்ப்பாட்டப் பேரணி கொள்ளுப்பிடியவிலுள்ள மின் சக்தி அமைச்சு வரை சென்றது. அங்கு “அவரவர் தகுதிக்கு ஏற்ப சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராய்வதாக, மின்சக்தி அமைச்சின் அதிகாரிகள் வாய் மொழிமூலம் வாக்குறுதி வழங்கியதாக கூறப்படுகின்றது. இதனயைடுத்து, ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை கைவிட்டு ஊழியர்கள் கலைந்து சென்றதாக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இவர்கள் முன்னெடுத்த ஆர்பாட்டம் காரணமாக கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி சந்திவரை போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடக்கூடியது.

மட்டக்களப்பில் திராய்மடு பகுதியில் ஆயதங்கள் மீட்பு-

armsமட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்திற்குட்பட்ட திராய்மடு சுவிஸ் கிராமத்திலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் 11.45 மணியளவில் பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தோட்டமொன்றினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, 30 துப்பாக்கி ரவைகள், 1 ரைக்கூடு என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சாவுடன் யாத்திரை சென்ற பிக்குகள் கைது-

arrest (2)காவி உடை அணியாமல் சாதாரண உடையில் காஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த 5 பௌத்த பிக்குகளை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளாக காவி உடை அணியாமல் சாதாரண உடையில் வந்த 5 பௌத்த பிக்குகளில் ஒரு பிக்குவிடமிருந்து கஞ்சா போதைபொருள் பக்கற்றுக்கள் ஹட்டன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் ஹட்டன் குடாகம பகுதியில் ரோந்து கடமையில் ஈடுப்பட்டிருந்த ஹட்டன் பொலிஸாரால் இந்த 5 பேர் பயணித்த வாகனம் தீடிரென பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது இதில் ஒருவரிடமிருந்து கஞ்சா தொகை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த 5 பேரையும் கைதுசெய்த ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபின் சம்மந்தப்பட்ட ஒரு பிக்குவை இன்று மதியம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் 4 பௌத்த பிக்குகள் குறித்து, குறித்த விகாரையின் நாயக்க தேரருக்கு அறிவித்ததன் பின் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.