பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு புதிய அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்-

ertrrதமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபில் உள்ள விடயங்கள் நாட்டின் புதிய அரசியல் யாப்பில் சேர்க்கப்பட வேண்டும் என இந்துமத தலைவர்கள் மற்றும் இந்துமத பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவின் யாழ்.மாவட்டத்திற்கான இரண்டாம் நாள் அமர்வு நேற்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மேற்படி கருத்தை வலியுறுத்திய இந்துமத தலைவர்கள், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தையும் அவர்களிடம் கையளித்துள்ளனர். சின்மயா மிஷனின் வதிவிட ஆச் சாரியாரும் யாழ்.மாவட்ட சர்வமத பேரவையின் செயலாளருமான ஜாக்கிரத சைதன்யா சுவாமிகள், வீணாகான குருபீடத்தின் தலைவர் சிவஸ்ரீ சபா வாசுதேவ குருக்கள், இலங்கை சைவ குருமார் அர்ச்சகர் சபையினை சேர்ந்த எஸ்.மகாலிங்கசிவ குருக்கள், எம்.கோகுலன், இந்து அமைப்புக்கள் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.பரமநாதன், ஆகியோருடன் சமயப் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றினர். அவர்கள் மேலும் கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களும் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற எண்ணத்தில் பயப்பீதியுடன் வாழும் நிலையே உள்ளது. இந்த நிலை முதற்கட்டமாக மாற்றி அமைக்கப்படல் வேண்டும். இலங்கை பல்லின மக்கள் கூட்டத்தை கொண்ட பல்தேசிய நாடு என்ற நிலை ஏற்படுத்தப்படல் வேண்டும். தமிழ் மக்கள் பேரவை எமக்கான தீர்வு திட்டத்தை தனது அரசியல் தீர்வு திட்ட முன் வரைபில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதனையே நாங்களும் எமது மக்களுக்கான தீர்வாகவும் கோருகின்றோம். இந்த தீர்வையே எமது கடந்த கால தலைவர்களும் கோரி வந்துள்ளனர். வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி உரிமையுடன் கூடிய தீர்வு திட்டமே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு. அதனையே தமிழ் மக்கள் பேரவை தனது அரசியல் தீர்வு திட்ட முன்வரைபில் கூறியுள்ளது. நாங்கள் சமாதானத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றோம். நல்லிணக்கம் எட்டப்படல் வேண்டுமாயின் முதலில் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும். குறிப்பாக அரசியல் கைதிகளது விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிப்படுத்தல், காணி விடுவிப்பு போன்றவை முதற்கட்டமாக அவசரமாக செய்யப்படல் வேண்டும். இவையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என இந்து அமைப்பு சார்ந்தோரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.