கட்சித்தாவல்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி விசேட செவ்வி-

D.Sithadthan M.P,.புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பா­டுகள், கூட்­ட­மைப்­பினுள் கட்­சித்­தா­வல்கள், வெளிநாட்டுச் சந்­திப்­புக்கள், தென்­னி­லங்­கையின் மாறாத நிலைப்­பா­டுகள், பிராந்­திய, சர்­வ­தேச நாடு­களின் ஆட்­சி­மாற்­றத்தின் பின்­ன­ரான நிலைப்­பா­டுகள் தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான தமிழ் மக்கள் விடு­தலைக் கழ­கத்தின் (புளொட்) தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் வழங்­கிய செவ்­வியில்,

தீர்வு விட­யத்தில் அதி­யுச்ச கோரிக்­கை­க­ளையே முன்­வைக்­க­வேண்டும். கட்­சித்­தா­வல்கள் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஒற்­று­மையை கேள்­விக்­குள்­ளாக்கும் ஆபத்­துள்­ளது. அத­னைத்­த­டுக்­க­வேண்­டிய பொறுப்பு கட்­சித்­த­லை­மை­க­ளுக்கே உள்­ளது. முன்னாள் ஜனாதிப­திக்கு பெரும்­பான்­மை­யி­னத்­தினுள் காணப்­படும் ஆத­ரவு, தெற்கு நிலை­மைகள் ஆகி­ய­வற்றை புதிய அர­சாங்­கமும் கவ­னத்தில் எடுத்தே தனது செயற்­பா­டு­களை கருத்­து­க்களை முன்­வைக்கும் என்­பதை ஆரம்­பத்­தி­லி­ருந்தே சிந்­தித்­துக்­கொண்­டிருந்தேன். அதே­நேரம் தமது நலன்­க­ளுக்­காக பிராந்­திய, சர்­வ­தேச தரப்­புக்கள் எம்மைப் பலி­கொ­டுப்­ப­தற்கு தயங்­க­மாட்­டாது என்­பதை உணர்ந்து கொள்­ள­வேண்டும் எனக் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அர­சியல் தீர்வு தொடர்­பான விட­யங்­களை ஆராய்­வ­தற்­காக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மேற்­கொண்­டி­ருந்த ஸ்கொட்­லாந்து விஜயம் எவ்­வாறு அமைந்­தது?

பதில்:- ஸ்கொட்­லாந்தின் தலை­ந­க­ர­மான எடின்­பிரோ சட்­டக்­கல்­லூ­ரியும், இலங்கை குறித்த சர்­வ­தேச செயற்­பாட்­டு­கு­ழு­வினர் உள்­ளிட்­டோரே இவ்­வ­கை­யான கலந்­து­ரையாடலை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். இவ்­வா­றான கலந்­து­ரை­யாடல் செப்­டெம்­பரில் இங்கு நடை­பெற்­றி­ருக்­கின்­றது. அதன் தொடர்ச்­சி­யா­கவே இக்­க­லந்­து­ரை­யா­டலும் நடை­பெற்­றி­ருந்­தது.

பிரித்­தா­னி­யாவின் கடு­மை­யான ஒற்­றை­யாட்­சிக்குள் ஸ்கொட்­லாந்து பிரிந்து செல்­வ­தற்­கான உரி­மை­யு­ட­னான அதி­கா­ரப்­ப­கிர்வு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரப்­ப­கிர்வை ஏற்­க­மு­டியும். அதனை தெளிவு­ப­டுத்­தவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அழைத்­துள்­ளார்கள் என்­ற­வா­றான தோற்­றப்­பாடே வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. உண்­மை­யி­லேயே நாம் ஸ்கொட்­லாந்து உட்­பட பல நாடு­களின் அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பாக கற்­றுக்­கொண்­டி­ருந்தோம். இது முடி­வெ­டுக்கும் கூட்­ட­மல்ல. ஒரு கருத்­த­ரங்­கே­யாகும்.

அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது தொடர்ச்­சி­யான செயற்­பாட்டு ரீதி­யாக நடை­பெ­று­மொ­ரு­வி­டய­மாகும். சமஷ்டி எனப் பேசப்­பட்­டாலும் தற்­போது தனி­ம­னித சமஷ்டி வழ­மையில் பேசப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில், இந்­தக்­க­ருத்­த­ரங்கின் ஊடாக அனு­ப­வத்தை பெறும் வாய்ப்பை பெற்­றி­ருந்­ததேன். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு என்­பதைக் காட்­டிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தி­நி­திகள், மத்­திய, தென் மாகாண முத­ல­மைச்­சர்கள் பங்­கேற்­றி­ருந்­தார்கள்.

கேள்வி:- உங்­க­ளு­டைய தலை­மையில் விசேட கூட்­டங்கள் நடை­பெற்­றி­ருந்­த­னவே?

பதில்:- ஆம், புலம்­பெ­யர்ந்த உற­வு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக லண்டன் ஈஸ்தாம் நக­ர­மண்­ட­பத்தில் விசேட பொதுக்­கூட்­ட­மொன்றை கூட்­டி­யி­ருந்தோம். பல்­வே­று­பட்ட பெருந்­தொ­கை­யா­ன­வர்கள் வரு­கை ­தந்­தி­ருந்­தார்கள்.

இலங்­கையில் என்ன நடக்­கின்­றது. நியா­ய­மான தீர்­வொன்று கிடைக்­குமா என்­பதை அறி­வ­தற்­கான ஆர்வம் அவர்­க­ளி­டத்தில் வழ­மையைப் போன்றே காணப்­ப­டு­கின்­றது. அதே­நே­ரம் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கலில் நம்­பிக்­கை­யில்­லாத ஈழப்­போ­ராட்டம் பற்றி பேசு­ப­வர்­க­ளையும் சந்­திக்­கக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது.

அமை­தி­யான இலங்­கைக்கு நிரந்­த­ர­மான நியாய­மான தீர்­வொன்று கிடைக்­க­வேண்­டு­மென்­ப­தையே பொது­வாக அனை­வரும் விரும்­பு­கின்­றார்கள் என்­பதை உண­ரக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. ஒட்­டு­மொத்­த­மாக இப்­ப­யணம் நன்­மை ­த­ரக்­கூ­டி­ய­தொன்­றா­கவே அமைந்­தி­ருந்­தது.

கேள்வி:- ஸ்கொட்­லாந்தில் காணப்­படும் அதி­கா­ரப்­ப­கிர்வு முறை­மை­யா­னது தமி­ழர்­களின் தீர்வு விட­யத்தில் எவ்­வ­ளவு தூரம் சாத்­தி­ய­மா­கு­மெனக் கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- பிரித்­தா­னி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் நீண்­ட­கால ஜன­நா­யக பாரம்­ப­ரி­யங்­களில் செயற்­ப­டு­மொரு நாடாகும். அங்கு முற்­போக்­கா­ளர்கள் பலர் காணப்­ப­டு­கின்­றனர். ஒற்­றை­யாட்­சியின் கீழ் வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீளப்­பெ­று­கின்­ற­போது ஏற்­படும் ஜன­நா­யகப் பிரச்­சி­னை­களை சிந்­திப்­பார்கள். இங்கு அவ்­வா­றில்லை.

ஒற்­றை­யாட்­சியின் கீழ் வழங்­கப்­படும் அதி­கா­ரப்­ப­ர­வலாக்­கத்தை இங்­குள்­ள­வர்கள் எவ்­வாறு கையாண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தற்­கான அனுபவம் நிறை­யவே உள்­ளது. குறிப்­பாக 13ஆவது திருத்­தச்­சட்­டத்தில் காணப்­படும் அதி­கா­ரங்­களை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். ஒத்­தி­யங்கு பட்­டியல் ஊடாக மத்­திய அர­சாங்­கத்தின் தலை­யீ­டுகள் என்­ப­வற்றை பார்த்­தி­ருக்­கின்றோம்.

தென்­னி­லங்­கையில் உள்­ள­வர்கள் இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்கள் ஒற்­று­மை­யாக தாமே தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­லக்­கூ­டிய வகை­யில் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் அமை­கின்­றது எனக் கரு­த­வில்லை. தமக்­குள்ள அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிக்­கின்றோம் என்ற எண்­ணப்­பாட்­டி­லேயே உள்­ளார்கள். காணி அதி­கா­ரங்­களை வழங்­கு­வது தொடர்பில் கருத்­திற்­கொண்டால் சில தென்­னி­லங்கை தரப்­புக்­க­ளுக்கு தனிப்­பட்ட முறையில் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன.

ஆகவே ஸ்கொட்­லாந்தின் அதி­கா­ரப்­ப­கிர்வு முறை­மையை முழு­மை­யாக இங்கு உள்­வாங்­கி­வி­ட ­மு­டி­யாது. அதனை ஆராய்ந்து எமது நாட்­டுக்கு ஏற்­ற­வ­கையில் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் தொடர்­பான விட­யங்­களை உள்­வாங்க முடி­யு­மெனக் கரு­து­கின்றேன்.

கேள்வி:- தமிழ் மக்கள் பேர­வையில் நீங்­களும் அங்கம் வகித்­தி­ருந்­தீர்கள். அத்­த­ரப்­பினால் வெளிடப்­பட்­டுள்ள தீர் வுத்­திட்ட முன்­வ­ரைபு தொடர்­பான உங் களின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் உள்­ள­டக்­கிய விட­யங்­களை உள்­வாங்­கி­ய­தா­கவே அத்­தீர்­வுத்­திட்ட முன்­வ­ரைபு காணப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச மத்­தி­யஸ்தத்­துடன் அர­சாங்­கத்­தோடு உடன்­ப­டிக்­கை­யொன்றை எட்­டுதல் என்ற விடயம் மட்­டுமே சற்று வேறு­பட்­ட­தாக காணப்­ப­டு­கின்­றது. ஏனைய விட­யங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தற்­போது வரையில் கூறும் விட­யங்­களே உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.

கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் ஐக்­கிய இலங்­கைக்குள் இணைந்த வட­கி­ழக்கில் சுய­நிர்­ண­யத்­து­ட­னான அதி­யுச்ச சமஷ்­டியே தீர்­வாக முடியும் என்­பதை ஆழ­மாக கூறி­வ­ரு­கின்றார். கிளி­நொச்­சி­யிலும் சரி, எடின்­பி­ரோ­விலும் சரி ஒரே விட­யத்­தையே கூறி­யுள்ளார். அந்த நிலைப்­பாட்டில் மாற்­றுக்­க­ருத்­துக்கள் இல்லை.

அவ்­வா­றி­ருக்­கையில் அர­சியல் தீர்வு எட்­டப்­ப­ட­வேண்­டு­மெனக் கோரும் தமி­ழர்கள் தரப்பில் சரி­யான தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. மக்கள் கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்ற குறை­பா­டுகள் காணப்­பட்­டி­ருந்­தன. அதன்­பி­ர­கா­ரமே மக்­களின் பங்­க­ளிப்­புடன் அர­சியல் தீர்­வுத்­திட்­ட­மொன்றை இறு­தி­செய்­வ­தற்­காக முன்­வ­ரை­பொன்று வெளியி­டப்­பட்­டுள்­ளது.

எமது அபி­லா­ஷைகள் என்ன என்­பதை நாம் வெளிப்­ப­டை­யாகக் கூற­வேண்டும். அத­னவெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றோம். அதில் எந்­த­வி­மான தவ­று­க­ளு­மில்லை. அர­சாங்­கத்­திடம் நேர­டி­யா­கவோ அல்­லது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பனூடா­கவே இவ் முன்­வ­ரைபின் இறு­தி­வ­டிவம் சமர்ப்­பிக்­கப்­படும் போது அதனை அர­சாங்கம் எவ்­வாறு கையா­ளப்­போ­கின்­றது என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.

தற்­போது தனி­ந­பர்­களும் அர­சி­ய­லமைப்பு தொடர்­பான யோச­னை­களை முன்­வைத்து வரு­கின்­றார்கள். என்­னைப்­பொ­றுத்­த­வ­ரையில் எந்­த­வொரு தமிழ்த்­த­ரப்­பாலும் முன்­வைக்­கப்­படும் முன்­வ­ரை­புகள் வேறு­பட்­டி­ருந்­தாலும் அர­சியல் தீர்வு தொடர்­பான விட­யங்கள் அடிப்­ப­டை­யி­ல் ஒன்­றாக காணப்­ப­டு­மென்றே நம்­பிக்கை கொண்­டிக்­கின்றேன்.

கேள்வி:- பல தமிழ்த் தரப்­புக்கள் காணப்­படும் நிலையில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பே தீர்­வுத்­திட்டம் தொடர்பில் இறுதி செய்­யு­மெனக் கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- தமிழ் மக்­களின் அதி­க­ளவு ஆணை­யைப்­பெற்ற முக்­கி­யத்­து­வ­மான தரப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே காணப்­ப­டு­கின்­றது. அதில் மாற்­றுக்­க­ருத்­திற்கு இட­மில்லை. அர­சாங்கம், சர்­வ­தேச தரப்­புக்கள் ஆகியோர் கூட்­ட­மைப்­பு­ட­னேயே பேசு­வார்கள்.

அவ்­வா­றி­ருக்­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏனைய தரப்­புக்­களால் கூறப்­ப­டு­கின்ற விட­யங்கள் அனைத்­தையும் உள்­வாங்­க­வேண்டும். அவற்றை எடுத்­து­ரைக்­க­வேண்­டிய பொறுப்­புள்­ளது. கூட்­ட­மைப்பு தமிழ்­த­ரப்பால் முன்­வைக்­கப்­படும் முக்­கி­ய­மான விட­யங்­களை நிச்­ச­ய­மாக உள்­வாங்­க­வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் இந்த விட­யங்­களை பிரே­ர­ணை­க­ளா­கவே முன்­வைக்க முடியும். அதன் பின்னர் கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெறும். ஆகவே எமது பிரே­ர­ணை­களை உள்­வாங்கும் வரையில் அதற்­கு­ரிய அழுத்­தங்­களை வழங்­கி­ய­வாறே இருக்­க­வேண்டும்.

கேள்வி:- தமிழ் மக்கள் பேர­வையின் முன்­வ­ரை­பா­னது திம்­புக்­கோட்­பா­டு­களை அடி­யொற்­றி­ய­தா­கவே உள்­ளது. ஆகவே திம்பு பேச்­சு­வார்த்­தையில் பங்­கெ­டுத்­தவர் என்ற அடிப்­ப­டையில் அத்­த­கைய தீர்­வா­னது சம­கால சூழலில் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மா­கு­மெனக் கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- திம்பு கோட்­பா­டுகள், சுய­நிர்­ணயம், தாயகக் கோட்­பாடு போன்ற விட­யங்­களை நேர­டி­யா­கவே கூறி­யி­ருக்­கின்­றது. தற்­போதும் தாயகக் கோட்­பாடு என்­பதைக் காட்­டிலும் வட­கி­ழக்கு இணைப்பை பற்றி பேசு­கின்றோம். இணைந்த வட­கி­ழக்கு ஒரு­மா­நிலம், அது தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக பூர்­வீ­க­மாக வாழும் பிர­தேசம் எனக் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. இதுவே தாயகக் கோட்­பாடு.

நாம் எமது அதி­யுச்­ச­மான கோரிக்­கையை முன்­வைக்­க­வேண்டும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே பேர­வையின் தற்­போ­தைய முன்­வ­ரைபு வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் அது­தொ­டர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது எவ்­வா­றான முடி­வுகள் எட்­டப்­ப­டு­கின்­றன. 1972, 1978ஆம் ஆண்­டு­க­ளைப்­போன்று தமி­ழர்­களின் பிர­தி­நி­தித்­து­வ­மின்றி அர­சி­ய­ல­மைப்புச் சபை அமை­யப்­போ­கின்­றதா என்­ப­தை­யெல்லாம் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும்.

கேள்வி:- தென்­னி­லங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் ஒற்­றை­யாட்சி என்­பதை கைவி­டு­வ­தற்கு தயா­ரா­க­வில்லை என்­பதை பகி­ரங்­க­மா­கவே அறி­வித்­துள்­ளதே?

பதில்:- தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு நியா­ய­மான கோரிக்­கை­களை முன்­வைக்கும். ஆயு­தப்­போ­ராட்­ட­மற்ற தற்­போ­தைய சூழலில் அதற்கு மேல் எது­வுமே செய்­ய­மு­டி­யாது. அதனை அவர்கள் நிரா­க­ரிப்­பார்­க­ளாயின் சாத்­வீ­க­ரீ­தி­யான, ஜன­நா­யக ரீதி­யான எதிர்ப்­புக்­களை காட்­டு­வ­தற்கு முயல்வோம்.

கேள்வி:- ஆட்­சி­மாற்­றத்தின் பங் கா­ளி­க­ளாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட மைப்பு காணப்­ப­டு­கின்ற நிலையில் ஐ.நா.தீர்­மானம், வடக்கில் இரா­ணுவ பிர­சன்னம், அர­சியல் தீர்வு போன்ற விட­யங்­களில் மாறாத கடு­மை­யான நிலைப்­பா­டு­க­ளையே புதிய ஆட்­சி­யா ளர்­களும் கொண்­டி­ருக்­கின்­றார்­களே?

பதில்:- என்னைப் பொறுத்­த­மட்டில் இத்­த­கைய விட­யங்கள் ஏற்­க­னவே எதிர்­பார்க்­கப்­பட்­ட­வையே. ஏனென்றால் யுத்­தத்தை வெற்றி கொண்­ட­தாக கூறும் முன்னாள் ஜனாதி­ப­திக்கு பெரும்­பான்­மை­யி­னத்­தினுள் காணப்­படும் ஆத­ரவு, தெற்கு நிலை­மைகள் ஆகி­ய­வற்றை புதிய அர­சாங்­கமும் கவ­னத்தில் எடுத்தே தனது செயற்­பா­டு­களை கருத்­து­களை முன்­வைக்கும் என்­பதை ஆரம்­பத்­தி­லி­ருந்தே சிந்­தித்­துக்­கொண்­டி­ருந்தேன்.

எமது அழுத்­தங்கள் குறிப்­பிட்­ட­தொரு எல்­லை­வ­ரையே செல்லும். அது கடந்த கால உண்மை. யதார்த்­தத்தை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அவ்­வா­றி­ருக்­கையில் எமக்­குள்ள வலி­மையின் பிர­காரம் பாதிக்­கப்­பட்ட தரப்­புக்­க­ளுக்­கான நியா­யங்கள், சர்­வ­தேச விசா­ரணை, அர­சியல் தீர்வு தொடர்­பான கோரிக்­கைகள் ஆகி­ய­வற்றில் துளி­ய­ள­வேனும் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொள்­ளாது செயற்­பட்டு அதி­கூ­டிய அழுத்­தங்­களை வழங்­க­வேண்டும்.

புலம்­பெ­யர்ந்­த­வர்கள் தமது நாடுகள் அர­சாங்­கங்­க­ளுக்கு வழங்கும் அழுத்­தங்கள் உட்­பட அனைத்தும் ஒன்­றி­ணைந்தே அச்­செ­யற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு முயற்­சி­களை மேற்­கொள்­ள­வேண்டும். நாம் எமது கட­மையை சரி­யாகச் செய்வோம். அடுத்து நடை­பெ­று­வதை பொறுத்­தி­ருந்து பார்ப்போம்.

கேள்வி:- இலங்கை – இந்­திய ஒப் பந்­தத்தின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்ட 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை முழு மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வ­தற்­கு ரிய அழுத்­தங்­களை இற்­றை­வ­ரையில் இந்­தி­யாவால் வழங்க முடி­யா­து­ போயுள்­ளதே?

பதில்:- இந்­தியா இலங்­கையை முழு­மை­யாக பகைக்­கா­ம­லி­ருப்­ப­தி­லேயே கவ­ன­மாக இருக்கும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தி­யா­வுக்கு வாக்­கு­று­தி­களை வழங்­கிய அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ருந்த போதும் இலங்­கையை பகைக்­க­வேண்­டு­மெனக் கரு­த­வில்லை. பின்னர் ஆட்­சியில் இருந்து அகற்­றி­யது வேறு­வி­ட­ய­மாக இருக்­கின்­றது. இருந்­த­போ­திலும் நேரடி­யாக பகைப்­பதை விரும்­ப­மாட்­டார்கள்.

80களில் இந்­தியா சில விட­யங்­களில் நேர­டி­யாக தலை­யீடு செய்­தது. அவ்­வா­றான நிலை­மைகள் தற்­போ­தில்லை. எந்­த­வொரு நாடும் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்­கத்தை எதிர்ப்­பதை இறுதி சந்­தர்ப்­ப­மா­கவே வைத்­தி­ருக்கும். தற்­போ­தைய நிலையில் இந்­தியா பொரு­ள­ாதார பலத்தை வலுப்­ப­டுத்தி அத­னூ­டாக நாடு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு முனை­கின்­றதே தவிர இரா­ணுவ ரீதி­யாக கட்­டுப்­ப­டுத்­து­வதற்கு விரும்­ப­வில்லை.

கேள்வி:- பிராந்­திய வலய, சர்­வ­தேச நாடுகள் தற்­போ­துள்ள ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் நட்­பு­றவின் அடிப்­ப­டை­யி­லேயே செயற்­பட்டு வரு­வ­தனை தெளிவாக அவ­தா­னிக்க முடி­கின்­றது. அவ்­வா­றான நிலையில் இந்­தியா, சர்­வ­தேசம் போன்ற மூன்றாம் தரப்­புகளை முழு­மை­யாக நம்­பி­யி­ருப்­பது எந்­த­வ­கையில் சாத்­தி­ய­மாகும்?

பதில்:- ஆரம்பம் முதல் தமிழ்த்­த­ரப்­புக்கள் சர்­வ­தேசம் சர்­வ­தேசம் எனக்­கூ­று­கின்றோம். நாம் உட்­பட தமிழ்த் தரப்­புக்கள் சர்­வ­தேச அர­சி­யலை சரி­யாக கற்க­வில்­லை­யென்­பதை நான் தற்­போது உணர்ந்­து­கொள்­கின்றேன். எந்­த­வொரு நாடும் தன்­னு­டைய நல­னையே முன்­னி­றுத்தும். அதன்­பின்­னரே ஏனைய விட­யங்கள் தொடர்­பாக கவ­னத்தை செலுத்­து­வ­தற்கு முனையும்.

இலங்­கையில் தமது நலன்கள், இங்­குள்ள பகு­தி­களில் தமக்­கி­ருக்கும் ஆதிக்­கத்தில் குறைவு வந்­து­வி­டக்­கூ­டாது, முக்­கி­ய­மாக சீனாவின் ஆதிக்கம் வந்­து­வி­டக்­கூ­டாது, எவ்­வாறு அதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வது, அதற்­காக எவ்­வாறு செயற்­ப­டு­வது என்­ப­தி­லேயே குறி­யாக இருப்­பார்கள். அதற்­காக எம்மைப் பலி­கொ­டுப்­ப­தற்கு அவர்கள் தயங்­க­மாட்­டார்கள். இதனை நாம் நன்­றாக உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

இந்­தி­யாவை எடுத்­துக்­கொண்டால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ்­மக்­களின் செயற்­பா­டுகள், அவர்­களின் ஆதிக்­கம் கார­ண­மாக முற்­று­மு­ழு­தாக எம்மை கைவிட்டுச் செயற்­பட முடி­யா­தி­ருப்­பதன் கார­ணத்தால் சில விட­யங்­களை எமக்கு சாத­க­மாகச் செய்ய முயற்­சிப்­பார்கள்.

இவ்­வா­றான நிலை­மை­க­ளுக்குள் எமது பிரச்­சி­னை­க­ளுக்கு எவ்­வாறு தீர்வை எட்­டலாம் என்­பதைக் கருத்திற் கொண்டு அதற்­கு­ரிய வகையில் நகர்த்­தல்­களை செய்­ய­வேண்டும்.

கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்டி என்ற சொற்­ப­தத்தை நேர­டி­யாக பயன் ப­டுத்­து­வதா இல்­லையா என்­ற­தொரு சர்ச்சை காணப்­ப­டு­கின்ற நிலையில் உங்­க­ளது நிலைப்­பாடு என்­ன­வா­க­வுள் ளது?

பதில்:- ஒற்­றை­யாட்­சியின் கீழ் அர்த்­த­முள்ள அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கத்தைச் செய்­ய­மு­டி­யாது. அவ்­வாறு செய்­யப்­ப­டு­மா­க­வி­ருந்தால் அந்த அதி­கா­ரங்கள் மீது மத்­திய அர­சாங்கம் தலை­யீடு செய்­வ­தற்­கான நிலை­மைகள் காணப்­படும். 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் பிர­காரம் உரு­வாக்­கப்­பட்ட மாகா­ண­ சபைச் சட்­டங்­களில் அந்த நிலை­மை­களை உணர்ந்­தி­ருக்­கின்றோம்.

ஆகவே சமஷ்டி அமைப்பு எனக்­கூ­று­வ­தற்கும் சமஷ்டி அமைப்பின் தன்மை இருப்­ப­தெனக் கூறு­வ­தற்கும் பாரிய வேறு­பாடு இருக்­கின்­றது. ஆகவே தான் சொற்­ப­தங்களை நேர­டி­யாக பிர­யோ­கிக்­க ­வேண்­டு­மென்­பதில் தீவி­ர­மாக இருக்­கின்றோம்.

கேள்வி:- தற்­போ­தைய நிலையில் தமிழ்த்­த­ரப்பின் கோரிக்­கை­களை உட ன­டி­யாக மேற்­கொள்­ள ­மு­டி­யா­துள்­ளது. கடும்­போக்­கா­ளர்­களின் அல்லது முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் ஆதிக்கம் மேலெ­ழுந்து விடு­மென புதிய ஆட்­சி­யா­ளர்கள் காரணம் கூற ஆரம் பித்­துள்­ளார்­களே?

பதில்:- தற்போதல்ல பண்டா -– செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது முதல் அதற்கடுத்த நடவடிக்கைகளுக்கும் இவ்வாறே காரணம் கூறப்பட்டது. ஆகவே இவ்வாறு காரணம் கூறிக்கொண்டிருப்பார்களாயின் இந்த நாட்டில் நியாயமான விடயமொன்றை செய்யமுடியாது போய்விடும். தமிழர்களின் விடயத்திலேயே இவ்வாறான காரணத்தை கூறுகின்றார்கள். ஏனைய தமக்கு தேவையான விடயங்களில் அவ்வாறு காரணங்களை ஒருபோதும் அவர்கள் கூறுவது கிடையாது.

கேள்வி:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்டமைப்பாக இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக தமிழரசுக்கட்சி ஒருதரப்பாகவும் இரண்டு பங்காளிக்கட்சிகள் வௌ;வேறு தரப்பாகவும் செயற்படும் நிலைமைகளை அண்மைக்காலங்களில் அவதானிக்க முடிக்கின்றதே?

பதில்:- அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் அவ்வாறான வேறுபாடுகள் எதுமில்லை.

கேள்வி:- அரசியல் கோரிக்கைகளில் அல்ல, செயற்பாடுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே? உட்பூசல்கள், மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றனவே?

பதில்:- செயற்பாடுகளில் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியினூடாக ஆசனத்தைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழரசுக்கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் ஆரோக்கியமான கூட்டமைப்பிற்கு ஏற்றவிடயமல்ல. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே பரஸ்பர அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. அவ்வாறான நம்பிக்கைக்கு இடமளிக்ககூடாது. கருத்து வேறுபாடுகள் காணப்படுவது வேறு. ஆனால் தீர்வு என்ற விடயத்திற்குச் செல்லும்போது அடிப்படையில் ஒன்றுபட்ட பூரணமாக நிலைப்பாட்டுடன் செயற்படவேண்டும்.

தமிழ் மக்களின் நீண்ட உரிமைப்போராட்ட வரலாற்றுடன் தொடர்பினைக் கொண்டிருக்காதவர்கள் அமைதியான சூழலில் அரசியலுக்கு வந்துள்ளார்கள். புதியவர்கள் அரசியலுக்கு பிரவேசிப்பதை நாம் வரவேற்கின்றோம். அவ்வாறானவர்கள் தனிநலன் சார்ந்த தீர்மானங்களை எடுக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன. அவ்வாறான தீர்மானங்கள் கட்சிவிட்டுக் கட்சிமாறும் நிலைக்கும் வித்திடுகின்றன. கட்சி விட்டுக் கட்சி மாறுவதைத் தடுக்கும் பொறுப்பு அந்ததந்த கட்சிகளும் தலைமைகளுக்கும் உள்ளது.

அதேநேரம் கூட்டமைப்பாக இருக்கும்போது பங்காளிக்கட்சிகளிடையே இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதானது கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கிவிடும் ஆபத்துமுள்ளது. (நேர்காணல் : ஆர்.ராம்)

வீரகேசரி 13.02.2016.