சரணடைந்தோர் பெயர் விபரங்களை 58ம் படையணி ஒப்படைக்க வேண்டும்-நீதிமன்றம் உத்தரவு-

-0=-இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவணத்தை இராணுவத்தின் முல்லைத்தீவு 58ம் படையணி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 58ம் இராணுவ படையணி அதிகாரிகளிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல்கள் அந்தப் படையணியின் முகாம் அலுவலகத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்தே, அந்த பெயர்ப் பட்டியல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதாக வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் பிபிசியிடம் தெரிவித்தார். அரசாங்கம் அளித்த பாதுகாப்பு மற்றும் பொதுமன்னிப்பு உத்தரவாதத்தை அடுத்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் முல்லைத்தீவு 58- ஆம் படையணி முகாமை சேர்ந்த இராணுவ அதிகாரிகளிடம் சரணடைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால், அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற தகவல் இதுவரையில் இராணுவத்தினராலும் அரசாங்கத்தினாலும் வெளியிடப்படவில்லை. அவர்களில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்ற சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட சிலர் தொடர்பில் அவர்களின் குடும்பத்தினர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அதிகார எல்லைக்குள் உட்பட்டது என்ற காரணத்தினால், அதுபற்றிய விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இந்த வழக்குகளை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற விசாரணைகளில், இராணுவத்தின் தரப்பில் முல்லைத்தீவு 58 ஆம் படைத்தளத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன சாட்சியமளித்தார். நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எவரும் 58 ஆம் படையணியிடம் சரணடைந்ததற்கான பதிவுகள் எதுவும் தங்களிடம் இல்லை என்று மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார். அப்போது மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் அந்த இராணுவ அதிகாரியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் சரணடையவில்லை என்று எவ்வாறு கூறுகின்றீர்கள் என வினவினார். அதற்குப் பதிலளித்த மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த அனைவரதும் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல்கள் தமது முகாமில் இருப்பதாகவும், அவற்றை பரிசீலனை செய்தபோது இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அங்கு சரணடைந்ததற்கான பதிவுகள் எதுவும் தங்களிடம் உள்ள ஆவணங்களில் இல்லை என்றும் தெரிவித்தார். இதனையடுத்து, சரணடைந்தவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல் ஆவணம், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளுடன் நெருங்கிய தொடர்புடையனவாக இருப்பதை நீதிமன்றத்திற்குச் சுட்டிக்காட்டி, அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதியிடம் சட்டத்தரணி ரட்ணவேல் கேட்டுக்கொண்டார். அந்த வேண்டுகோளுக்கு அரச தரப்பு சட்டத்தரணி பலத்த ஆட்சேபணை தெரிவித்தார். ஆயினும் அந்த ஆட்சேபணையை நிராகரித்து, சம்பந்தப்பட்ட ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். சரணடைந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அரசாங்கம் அளித்திருந்த உத்தரவாதத்தை அடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்திடம் பலரும் பல தடவைகள் கோரியிருந்தனர். ஆயினும், அத்தகைய தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் எவரும் தங்களிடம் அவ்வாறு சரணடையவில்லை என்றும் இராணுவத்தினர் மறுதலித்து வந்திருந்தனர். இந்த நிலையிலேயே, முல்லைத்தீவு 58 ஆவது படைப்பிரிவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணம் இருப்பதாக நீதிமன்ற வழக்கு விசாரணையில் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.