போரினால் ஏற்பட்ட வடுக்களைச் சீராக்க ஒஸ்திரியாவின் உதவி அவசியம்-ஜனாதிபதி-

sfdfdfdfபோரினால் ஏற்பட்ட வடுக்களையும், இழப்புக்களையும் சீராக்கி நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் சக வாழ்வையும் மேம்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் உதவி, ஒத்தாசை மிக அவசியமானதாகும். அந்தவகையில் இலங்கையின் நட்பு நாடான ஒஸ்திரியா எமக்கு உதவ வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்திரிய ஜனாதிபதி ஹெய்ன்ஸ் பிஸ்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஒஸ்திரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதியுடன் மேற்கொண்ட உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, கடந்த 26 வருட கால போரினால் ஏற்பட்ட இழப்புக்களையும், வடுக்களையும் மீளமைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உள்நாட்டில் சகவாழ்வை ஏற்படுத்தவும் நட்பு நாடுகளின் உதவி எமக்கு மிகவும் அவசியப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையில் வாழும் மக்களுக்கு அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்.

காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு-

trinco seaதிருகோணமலை, கும்புறுப்பிட்டி கடற்கரையில் ஆணொருவரின் சடலம், இன்றுகாலை 10.30க்கு மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் திகதி, இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றதாகவும் அவ்விருவரும் 17ஆம் திகதி வரை வீட்டுக்கு வரவில்லை என துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு காணாமல்போன இருவரில் ஒருவரின் சடலமே, இன்று மீட்கப்பட்டதாகவும், சடலமாக மீட்கப்பட்டவர், திருகோணமலை – அபயபுரப் பகுதியைச் சேர்ந்த ரோகன நிசாந்த முனவீர (வயது 44) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர், இறுதியாக நீலநிற மேலங்கி மற்றும் நீலநிற காற்சட்டை அணிந்திருந்ததாக தெரியவருகின்றது. சடலம், தற்போது வைத்திய பரிசோதனைக்காக திருமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குச்சவெளிப் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ய ஏற்பாடு-

missing_children_with_maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று இரவு நாடு திரும்பவுள்ளார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை ஹம்பாந்தோட்டைக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான மிரிஜ்ஜவிலை வரண்ட வலய பூங்காவுக்கு சென்று ஞாபகார்த்தமாக மூலிகை மரமொன்றினை நட்டு நினைவுப் புத்தகத்தில் ஒப்பமிட்டார்.

நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல்-

courtsநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு பௌத்த பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பியகம சுசிம தேரர், பிட்டிகல தம்மவினீத தேரர், மதுவாகல தம்மசிறி தேரர், கிரம தேவிந்த தேரர் ஆகிய நான்கு தேரர்களே எதிர்வரும் மார்ச் 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும் நேற்றுமாலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த மாதம் 26ம் திகதி ஹோமாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் பௌத்த தேரர்கள் சிலர் அவ்விடத்தில் கலகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புகையிரதமும் கொள்கலனும் மோதி விபத்து-

trainபுத்தளம் மாவட்டம் முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரிக்கட்டி பிரதேசத்தில் புகையிரதத்துடன் கொள்கலன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற புகையிரதமும் கொள்கலன் ஒன்றும் இவ்வாறு மோதிக் கொண்டதில் புகையிரதத்திற்கு சேதமேற்பட்டுள்ளது.

விபத்தில் கொள்கலன் குடைசாய்ந்துள்ளதுடன், புகையிரதத்தின் இரு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டுள்ளன. இதனால் புகையிரதத்தின் இரு சாரதிகளும், கொள்கலனின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தினால் புத்தளம் நோக்கிய ரயில்சேவைகள் முழுமையாக பாதிப்படைந்திருந்தது. இந்நிலையில் தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தில் இலங்கைப் பெண்களை அடிமைகளாக வைத்திருந்தவர் கைது-

islandஇரண்டு இலங்கைப் பெண்களை அடிமைகளாக நடத்தி வந்த இலங்கையர் ஒருவர் தெற்கு ஐஸ்லாந்தின் விக் நகரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மனிதக் கடத்தல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளும் அந்நாட்டு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்ததுடன் பெண்களையும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரின் வீட்டின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த இரகசிய அறையொன்றில் மீட்கப்பட்ட இரண்டு இலங்கை பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ் பள்ளத்தில் விழுந்ததில் சாரதி உட்பட 40பேர் காயம்-

accidentதனியார் ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று, ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, இரத்தினபுரி தம்புருவன- காவத்தை வீதியில் சென்றவேளை, இரத்தினபுரி, தம்பலுவன பகுதியில் வைத்து 15 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து, இன்றுகாலை 6.15க்கு இடம்பெற்றதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. பஸ்ஸின் சாரதி உட்பட பஸ்ஸில் பயணித்த ஆடைத் தொழிற்சாலையின் 40 ஊழியர்களும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.