சமஷ்டி ஆட்சிமுறை உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை-வடக்கு முதல்வர்

vigneswaranசமஷ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கனடாவில் கியூபெக் என்று பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசம் உள்ளதாகவும் அவர்கள் கனடாவை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றும் வாக்கெடுப்பிலும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு உரிமையை கொடுத்தால் பிரிந்துவிடுவார்கள் என்றொரு கருத்து உள்ளதாக கூறிய அவர், சிறுபான்மை மக்களின் உரிமையை கொடுத்துப் பாருங்கள் அவர்கள் உங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

நாட்டின் பல பகுதிகளிலும் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு-

2345454வேலையற்ற பட்டதாரிகள் நாட்டின் பல பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பில் கடந்த 16ம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனங்களை வழங்கக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தங்களில் பிரச்சினை குறித்து பல தடவைகள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதிலும் அவை தொடர்பில் இதுவரை எவ்வித சாதகமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் அநுருத்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, காலி, குருநாகல் மற்றும் கண்டி உள்ளிட்ட பல நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இது இவ்விதமிருக்க வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல்-

dgfயுத்த காலத்தின்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதாக அரசாங்கத்திடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வாளர்கள் என்று கூறிக் கொள்வோரிடமிருந்தே தொலைபேசி மூலமாகவும் இனந்தெரியாத நபர்களிடமிருந்து நேரடியாகவும் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக 50பேர் வரையான பெண்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசனை சந்தித்து முறையிட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கண்ணீருடன் தங்களின் கதைகளை சொல்லி அழுதார்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். காணாமல் போனவர்களின் உறவினர்களை தேடி ஆர்ப்பாட்டம் செய்யாதே, ஊர்வலம் நடத்தாதே என்ற நேரடி அச்சுறுத்தல்கள், அகாலவேளை தொலைபேசி அழைப்புகள், இரவுநேர கதவு தட்டல்கள், தங்கள் வீடுகளில் உள்ள பெண்பிள்ளைகளின் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை இவர்கள் என்னிடம் சொல்லி அழுதார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு பிராந்தியங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளிடமும் பிரதமரிடமும் இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளதாக கூறிய அமைச்சர் மனோ கணேசன், இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

வாகன நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்களை அமைக்கத் தீர்மானம்-

flo overகொழும்பில் நிலவும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் புதிய மேம்பாலங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பேஹெலியகொட தொடக்கம் கொழும்பு கோட்டை மற்றும் இராஜகிரியவரை இந்த மேம்பாலத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் டீ.சீ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மேம்பாலத்தை நிர்மாணிப்பதற்கான சூழல் ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், மேம்பாலத்தினூடாக பெறக்கூடிய நன்மைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய மேம்பாலத்தை நிர்மானிக்கும் பொருட்டு பொதுமக்களின் காணிகள் கையகப்படுத்தப்படாது எனவும் பெருந்தெருக்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது-குணதாச அமரசேகர-

gunadasa amarasekaraகாணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டால் நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலே குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வதேசத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே டிலான் போன்றோர் செயற்பட்டு வருகின்றனர். புலிகள் இயக்கம் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது ஈழக் கனவு இன்னும் ஓயவில்லை. மாறாக சர்வதே மட்டத்தில் அவை மிகவும் சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகம், சமாதானம் எனக் கூறிக்கொண்டு இன்று சர்வதேசம் இலங்கைக்குள் காலடி எடுத்து வைப்பது, உண்மையான நல்லிணக்க செயற்பாட்டிற்காக அல்ல. மாறாக சர்வதேசத்தின் விருப்பிற்கு அமைய நாட்டை ஆட்டிப்படைக்கவே. இந்நிலையில், சர்வதேசத்தின் எண்ணத்தை தெளிவாக புரிந்துகொண்டு தூரநோக்கு சிறந்தனையுடன் செயற்பட வேண்டும் என்றார் அவர்.

குப்பைக்கு தீ வைத்த பெண் மரணம்-

death (4)குப்பைக்கு வைத்த தீயில் தவறுதலாக மயக்கமடைந்து வீழ்ந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 12 நாட்களின் பின்னர் சிகிச்சை பயலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார்.

இவ்வாறு மரணத்தை தழுவிக்கொண்டவர் புதுக்குடியிருப்பு கோம்பாவிலைச் சேர்ந்த பிரபாகரன் சுதர்சினி (27) என்பவராகும். கடந்த 8ம் திகதி பிற்பகல் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

குறித்த பெண் சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்துள்ளார். நீதிமன்ற பணிப்புரையின்படி மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.