முதலில் உரித்துக்களைக் கொடுங்கள், பின் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டும்.- வடக்கு முதல்வர்

saranar9வது தேசிய சாரணர் ஐம்போறியினை, யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 04.30 அளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
சாரணிய மாணவர்களின் சாரணிய கௌரவத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
பின்னர் சாரணிய மகுட வாக்கியத்தினை வாசித்து சாரணிய ஐம்போறியினை ஆரம்பித்து வைத்தார்.
இங்கு உரையாற்றிய வடக்கு முதல்வர் தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டிய உரித்துக்களைக் கொடுங்கள், அதற்குப் பின்னர் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டுமென தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை முழுவதிலும் இருந்து சாரணியர்களை அழைத்து வந்து நிகழ்வினை நடாத்துவது முக்கியமான நேரம். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்துள்ள இளம் சாரணியர்கள் ஒன்றிணைந்து எதையும் சாதிக்க முடியுமென்று என்று எடுத்துக்காட்டும் வகையில் சாரணியர் பாசறை நடைபெறுகின்றது.
எமது சகல மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை கட்டி எழுப்ப வேண்டுமாயின், சாரணியத்தின் குறிக்கோள்கள் எமக்கு முக்கியமானது.
ஆனால் அண்மையில் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். கலப்புத் திருமணங்கள் மிகவும் அவசியமென்று, கலப்பு திருமணத்தினை எதிர்ப்பவன் அல்ல. எனது இரு மகன்களும் சிங்கள பெண்களையே திருமணம் செய்துள்ளார்கள்.
தமிழ் மக்களுடைய உரித்துக்களைக் கொடுங்கள். சட்ட பூர்வமாக கொடுக்க வேண்டியவற்றினைக் கொடுங்கள். அதன்பின்னர் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டும் என்றார்.

தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம்

dgfஇலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் கைதிகள் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், இந்த இருவர் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறையிலுள்ள இந்த இருவரும் உண்ணாவிரத்ததை மேற்கொண்டுள்ளதை அவர்களின் உறவினர்களும், அரச அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இந்த இரு கைதிகளும் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் வைத்து கைது செய்யப்பட்டு, 13 மாதங்கள் ஓமந்தையில் செயற்பட்டு வந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்பே பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் இவர்களைப் பொறுப்பேற்று பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு சென்றதாக அவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாத காரணத்தாலேயே, இவர்கள் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தமிழ்க் கைதிகளின் விடுதலைக்கான செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய அருட்தந்தை சக்திவேல் கூறுகின்றார்.

சுதந்திரக் கட்சியுடன் இணைய 17 கட்சிகள் விருப்பம். – எஸ்.பி.திஸாநாயக்க

thisaசிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க இதுவரை 17 கட்சிகள் முன்வந்துள்ளன
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதற்கு இதுவரை 17 கட்சிகள் முன்வந்துள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (22) ஹட்டன் – லக்ஷபான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த கட்சி இரண்டாக பிளவடையக் கூடிய சாத்தியம் கிடையாது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
எத்தனை அழுத்தங்கள் கொடுத்தாலும் யாராலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த முடியாது. பொது தேர்தலில் சுதந்திர கட்சியில் போட்டியிட்ட மாற்று கட்சியினரே இந்த சதி முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுதந்திர கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற சில விஷமிகள் சதி முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். என்னை அவ்வளவு இலகுவில் வெளியேற்ற முடியாது. நான் ஒருபோதும் வெளியேற மாட்டேன் என்றார்.

ஆப்கானில் தாலிபான்கள் தற்கொலைத் தாக்குதல்:14 பேர் பலி

afghanஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆறு கால்துறையினர், எட்டு பொதுமக்கள் உட்பட குறைந்தது 14பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்  நாட்டின் வடக்கே பர்வான் மாகாணத்தில் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அங்காடி மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதலுக்கு தாங்களே காரணம் என தாலிபான்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர்.
அவர்களை எப்படி மீண்டும் பேச்சுவார்த்தை மேடைக்கு கொண்டுவருவது என்பது குறித்த நான்கு நாடுகள் பங்குபெறும் மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கவுள்ள நிலையில், திங்களன்று இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் 3-வது நாளாக நடந்த சண்டை முடிவடைந்தது.

kasmirஸ்ரீநகர்: காஷ்மீரில் தொழில் முனைவோர் கட்டிடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் 3-வது நாளாக நீடித்து வந்த துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. 48 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சண்டை முடிந்ததை அடுத்து தீவிரவாதிகள் கைப்பற்றிய கட்டிடத்தை ராணுவத்தினர் சோதனை நடத்தினர்.
கடந்த 20-ம் தேதி ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பாம்போரில் ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிச்சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ரிசர்வ் போலீசார் 2 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அருகில் உள்ள தொழில் முனைவோர் பயிற்சி கட்டிடத்தில் தீவிரவாதிகள் புகுந்த போது கட்டிடத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

அவர்களை பாதுகாப்பு படையினர் மீட்கும் முயற்சியில் இளம் ராணுவ அதிகாரி கேப்டன் துஷார் மகாஜன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பொதுமக்களில் ஒருவரும் பலியானார். ஒரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இருப்பினும் கட்டிடத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மற்ற இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு தீவிரவாதியின் உடல் கிடைத்தது, மற்றொருவனின் உடலை தேடி வருகின்றனர்.