பொருளாதாரத் தொழில்நுட்பக் கூட்டுறவு ஒப்பந்தம்: இந்தியக் குழு இலங்கை வருகிறது

sri &indiaஇந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட உள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இந்தியத்தூதுக் குழு ஒன்று எதிர்வரும் 4 ஆம் தேதி இலங்கை வருகிறது என, இலங்கைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய பிரதமர் ரனில் விக்ரமசிங்க, இலங்கை வரவுள்ள இந்திய தூதுக்குழுவினருடன் பேச்சுக்களை நடத்துவதற்கு உள்ளுர் அமைப்புகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பேச்சுவார்த்தைகளின் போது அறிவிக்கப்படும் எனவும், எவ்வாறாயினும் இறுதி முடிவு, பேச்சுவார்த்தைகளின் பின்னர் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

‘பாதிப்பு இருக்காது’
நாடாளுமன்றம் மற்றும் தொழில் அமைப்புகளுடன் விரிவாக ஆராய்ந்து, பின்னர் பகிரங்கமாகவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்பதால், இது தொடர்பில் அடிப்படையற்ற குற்றங்களை சுமத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், இலங்கையர்களது தொழில்கள் பறிக்கப்படாது என பிரதமர் உறுதியளித்தார்.

வெளிநாட்டவர்களுக்கு இலங்கை வந்து தொழில் செய்வதற்கு விதிமுறை ஒன்று உள்ளது என சுட்டிக்காட்டிய பிரதமர், வெளிநாட்டவர்களின் சேவையின் அவசியம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் அவர்களது சேவைகள் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவுடன் 1998 இல் மேற்கொள்ளப்பட்ட சுதந்திர பொருளாதார ஒப்பந்தம் ஒன்றில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக நாம் முமு பலன்களை பெற்றுக் கொள்ள முடியாமல் போனதாக சுட்டிக்காட்டிய ரனில் விக்ரமசிங்க, அதனை கருத்தில் கொண்டே இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.